காவிரி மேலாண்மை வாரியம் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக காவிரியில் மேகதாது அணை கட்ட தீர்மானத்திற்கு ஒப்புதல் அளித்ததை கண்டித்தும், இந்தத் தீர்மானத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் கடலூர் மாவட்ட தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் தீர்மான நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்திற்கு, சிதம்பரம் காவல்துறையினர் அனுமதி மறுக்கப்பட்டதால் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் விவசாயிகள் கண்ணன், ஹாஜா மைதீன், லட்சுமி காந்தன், சுரேஷ்குமார், தங்கராசு, இளையராஜா, அன்பழகன், பன்னீர்செல்வம், பொன்னுசாமி, உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டு காவேரி நதிநீர் மேலாண்மை வாரிய தீர்மான நகலை கிழித்துப் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், பிரதமர் மோடி தலைமையிலான அரசையும், காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தைக் கண்டித்தும், தீர்மானத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து தீர்மான நகலை கிழித்த விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து, அவர்களை தனியார் மண்டபத்தில் தங்க வைத்து அவர்களிடம் விவரத்தைப் பெற்றுக் கொண்டு விடுதலை செய்தனர்.