தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘என் மண்; என் மக்கள்’ என்ற பெயரில் கடந்த ஜூலை 28 ஆம் தேதி இராமேஸ்வரத்திலிருந்து நடைப்பயணத்தைத் தொடங்கி தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வருகிறார்.
பல்வேறு கட்டங்களாக நடைபெறும் ‘என் மண்; என் மக்கள்’ அண்ணாமலை பங்கேற்ற நடைப்பயணம் கடந்த டிசம்பர் 27ஆம் தேதி நடைபெற்றது. அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திரன், கார்த்திகேயன் ஆகிய இருவரும் காவல் சீருடையில் இருந்துகொண்டே பா.ஜ.க.வில் தங்களை இணைத்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பேசுபொருளானது.
இதையடுத்து, நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திரன், கார்த்திகேயன் ஆகிய இருவரிடம் விசாரணை நடத்தி தஞ்சை சரக டிஐஜிக்கு அறிக்கை அனுப்பினார். அதன் அடிப்படையில்,சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திரன், கார்த்திகேயன் ஆகிய இருவரும் நாகப்பட்டினம் ஆயுதப்படை பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இந்த நிலையில், தஞ்சை சரக டிஐஜி உத்தரவின் பேரில் அவர்கள் இருவரையும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளன.