கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், சிங்காரப்பேட்டையில் 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் நல சமுதாய கூடத்தை இன்று ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திறந்துவைத்தார். மேலும், இந்நிகழ்ச்சியில் 256 பேருக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி, தி.மு.க. மா.செ செங்குட்டுவன், பர்கூர் எம்.எல்.ஏ மதியழகன், தர்மபுரி ம.செ தடங்கம் சுப்பரமணி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர் கயல்விழி செல்வராஜ், “எமது அரசு என்றில்லாமல்; நமது அரசு என்ற அடிப்படையில் பொதுமக்களுக்கான சேவையை செய்து வருகிறது நம் அரசு. முன்பு இருந்த அரசு, திட்டங்களை செயல்படுத்தாமல் பத்தாண்டுகளாக வஞ்சித்து வந்துள்ளது. ஆனால் அதை உடைத்தெறிந்துள்ளது நம் அரசு.
இந்த அரசு பெண்களுக்கான அரசாகவே செயல்பட்டு வருகிறது. பேருந்து கட்டணம் தொடங்கி அடுத்தடுத்து பல சலுகைகளை அளித்து வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஏற்றார் போல் தொழில் செய்வதற்கான திட்டங்கள் நடைமுறைப்படுத்த உள்ளது. தூய்மை பணியாளர்களுக்கு தமிழக முழுவதும் 50 கோடி ரூபாய் செலவில் மானியத்துடன் கூடிய வீடு கட்டிதரும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. திட்டங்களை முறையாக ஆதிதிராவிடர் துறையில் உள்ள அதிகாரிகள் முறையாக பொதுமக்களுக்கு எடுத்து செல்ல வேண்டும். அப்படி திட்டத்தை தெளிவு படுத்தாதபட்சத்தில் புகார் தெரிவித்தால், அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.