திருச்சி துறையூர் அருகே எஸ்.எஸ்.புதூர் பகுதியில் கறி விருந்திற்காக 22 பேருடன் சென்ற மினி ஆட்டோ சரக்கு வாகனம் தண்ணீர் இல்லாத 70 அடி கிணற்றில் விழுந்து விபத்து ஏற்பட்டது. சாலையில் சென்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தின் டயர் வெடித்ததால் தடுமாறிய வாகனம் கிணற்றில் விழுந்ததில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தற்போது வரை 14 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் அருகில் இருந்த கிராம மக்களின் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியை பார்வையிட்டனர்.
இந்த நிமிடம் வரை 14 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் 8 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். தற்போது திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டிருக்கிறார்கள். மிஞ்சியுள்ளவர்களை மீட்கும் பணியில் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. சரக்கு வாகனத்தில் பயணம் செய்த கோமதி, யமுனா, சஞ்சனா, கயல்விழி, குணசீலன், குமாரத்தி, சரண்குமார், எழிலரசி ஆகியோர் உயிரிழந்ததாக தகவல்கள் வந்துள்ளது. மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.