Published on 12/05/2018 | Edited on 12/05/2018
வேலூர் புதிய பஸ் நிலையம் சென்னை பஸ்கள் நிறுத்துமிடத்தில் நேற்று மதியம் 1.15 மணியளவில் சென்னை செல்லும் பஸ்சில் பயணிகளுடன் பயணியாக பர்தா அணிந்தவர் டிரைவர் இருக்கை பின் பக்கம் அமர்ந்திருந்தார். அப்போது பஸ்சில் ஏறிய திருநங்கைகள் சிலர் அனைவரிடமும் காசு வாங்கிக்கொண்டு பர்தா அணிந்தவரிடம் வந்து காசு கேட்டனர். அப்போது அவர் இல்லை என்று கூறினார்.
ஆண் குரலில் பதில் இருந்ததால் அவரை தங்களை போன்று திருநங்கையோ என்று நினைத்த அவர்கள், பர்தாவை விலக்கி பார்த்தனர். அப்போது அவர் ஆண் என்பது தெரியவந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியைடைந்த பயணிகள், யாரோ பர்தா அணிந்து பயணிகளிடம் திருடத்தான் வந்திருப்பார் என்று நினைத்து அவரை பிடித்து அங்குள்ள புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீஸ் விசாரணையில் அவரது பெயர் அபினேசன் (25) என்பதும் வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. இதையெடுத்து அவர் சொன்ன விஷயம்தான் இன்ஸ்பெக்டரை அதிர்ச்சியடைய செய்தது. விசாரணையில் அபினேசன் ‘சார் எனக்கு ரொம்ப நாளாக பர்தா அணிந்தபடி பஸ்சில் சென்னை வரை பயணித்து திரும்ப வேண்டும் என்று ஆசை’ இருந்தது. அதனால்தான் இப்படி செய்தேன். என்று கூறினார். இதைக்கேட்ட இன்ஸ்பெக்டர், வாலிபரை எச்சரித்து எழுதி வாங்கிவிட்டு அனுப்பி வைத்தார்.