
தேர்வின் போது, கரும்பலகையில் பதில்களை எழுதி மாணவர்களுக்கு உதவிய ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.
மத்தியப் பிரதேசம் மாநிலம், பெதுல் மாவட்டத்தில் தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்காக சங்கீதா விஸ்வகர்மா என்ற ஆசிரியர் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது மாணவர்களுக்கு உதவும் விதமாக வகுப்பில் உள்ள கரும்பலகையில் வினாக்களுக்கான பதில்களை ஆசிரியர் சங்கீதா விஸ்வகர்மா எழுதி கொண்டிருந்தார். இதனை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். இது தொடர்பான வீடியோ, இணையத்தில் வேகமாக பரவியது.
வீடியோ வைரலானதை தொடர்ந்து, இந்த சம்பவத்தை மாவட்ட நிர்வாகம் உடனடியாக தன்னுடைய கவனத்திற்கு கொண்டு வந்தது. இந்த விவகாரத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, பெதுல் மாவட்ட ஆட்சியர் அவசர விசாரணைக்கு உத்தரவிட்டார். அந்த விசாரணையின் போது, ஆசிரியை மீதான குற்றச்சாட்டுகள் உண்மை என்று கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து, ஆசிரியை சங்கீதா விஸ்வகர்மா இடைநீக்கம் செய்யப்பட்டார். அதோடு, ஆசிரியை மீது ஒழுங்கு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, கல்வித் துறை அனைத்து ஆசிரியர்களுக்கும் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.