
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னை ஏமாற்றியதாக அவர் மீது நடிகை ஒருவர் புகார் அளித்திருந்தார். அதன் பின்னர் அவர் இந்த வழக்கைத் திரும்ப பெற்றுக்கொண்டார். இருப்பினும், நடிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்தியத் தண்டனை சட்டம் 376வது பிரிவின்படி வழக்குப்பதிவு செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில், இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சீமான் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின் முடிவில் இந்த வழக்கை12 வாரத்தில் முடிக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக நேற்று (27.02.2025) சீமான் நேரில் ஆஜராகும்படி வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். சம்மனில் குறிப்பிட்டிருந்தபடி சீமான் காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை. இருப்பினும் அவர் கட்சிப் பணிக்காகச் சென்றிருப்பதாகக் கூறி அவரது சார்பில் வழக்கறிஞர்கள் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர். இதன் காரணமாக இன்று (28.02.2025) காலை 11 மணிக்கு சீமான் ஆஜராக வேண்டும் என நீலாங்கரையில் உள்ள வீட்டில் சம்மனை போலீசார் ஒட்டினர். அதில், ‘விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் கைது செய்ய நேரிடும்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து ஒரு சில நிமிடங்களிலேயே சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை அவரது வீட்டில் இருந்து வந்த நபர் ஒருவரால் கிழிக்கப்பட்டது. இத்தகைய சூழலில் தான் சீமான் வீட்டில் சம்மனை ஒட்டிச் செல்வதற்காக தனியாக போர்டு வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சீமான் மனைவி கயல்விழி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “எனக்கு வெளியே வரச் சங்கடமாக இருந்ததால் தான் காவல்துறை சார்பில் ஒட்டப்பட்ட சம்மனைக் கிழித்துக் கொண்டு வரச் சொன்னேன். ஆனால் அங்கிருந்த பாதுகாவலரை காவல்துறை கைது செய்வார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை. நீலாங்கரை காவல் ஆய்வாளர் மீது மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தொடருவோம். மனரீதியாக எங்களைத் துன்புறுத்த வேண்டும் என்று தான் காவல்துறை திட்டமிட்டு இதனைச் செய்துள்ளது. இதன் மூலம் எங்களை அசிங்கப்படுத்துகிறீர்களா?. சீமான் மக்களுக்கான நேர்மையான தலைவர் ஆவார். பாலியல் வழக்கின் விசாரணையை விரைந்து விசாரிக்க உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
அதற்காக அடுத்த நாளே வீட்டுக்கு வருவீர்களா?. ஈகோ அடிப்படையில் காவல்துறையினர் இவ்வாறு செயல்பட்டு வருவது தெரிகிறது. முன்னதாக காவல்துறை அளிக்கும் சம்மனைக் கையெழுத்திட்டுப் பெறத் தயாராகவே இருந்தோம். கடந்த முறை சம்மன் கொடுக்க போலீசார் வந்தபோதே காவல் நிலையத்தில் ஆஜராகுவதற்காகத் தேதியைச் சீமான் கொடுத்தார். எங்கள் வீட்டுப் பாதுகாவலர் துப்பாக்கி எடுத்துத் தான் கொடுத்தார். அவர் காவலரை மிரட்டவில்லை. சீமான் சட்டப்படி வழக்குகளை எதிர்கொள்வார். இந்த வழக்கு தொடர்பான விசாரணையை அவர் சந்திப்பார். சம்மனைக் கிழிக்கச் சொன்னது நான்தான். முடிந்தால் என்னைக் கைது செய்யட்டும். சம்மனைப் படிக்க வேண்டும் என்பதற்காகவே நான் அதனைக் கிழித்துக் கொண்டு வரச் சொன்னேன்.

அவ்வளவு வழக்குகளை அவர் சந்தித்துள்ளதால், இந்த வழக்கையும் சந்திப்பதில் எங்களுக்கு எந்த பயமும் இல்லை. மேலே இருந்து அழுத்தம் கொடுப்பதால் தான் காவல்துறை இவ்வாறு நடந்து கொண்டனர். இன்னும் நிறையச் சம்மன் ஒட்ட வசதியாக இருக்கும் என்பதால் தான் தனியாக போர்டு வைத்திருக்கிறோம். காவல்துறை மீது மரியாதை இருக்கிறது. காவல்துறை பணியின் போது இவ்வாறு நடந்து கொள்ளும் என எதிர்பார்க்கவில்லை. கைது செய்து அழைத்துச் சென்ற இருவரையும் பூங்காவில் வைத்துத் தாக்கியுள்ளனர். சம்மனை ஒட்டுவதால் வீட்டின் கதவு பாழ் ஆகிறது என்பதால் தான் போர்டு வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.