சென்னை ஆவடியில் உள்ளது சி.ஆர்.பி.எஃப் பயிற்சி மையம். இந்த மையத்தில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி மையம் முழுக்க முழுக்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் வருகிறது. குறிப்பாக, வீரர்களுக்கு துப்பாக்கிச் சுடும் பயிற்சிகள் இந்த மையத்தில் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சி.ஆர்.பி.எஃப் பயிற்சி மையத்துக்கு அருகே வசிப்பவர் ராஜேஷ். பெயிண்டர் தொழில் செய்து வருகிறார். இவர் வழக்கம் போல் தனது பணியை முடித்துக் கொண்டு, நேற்று (28/04/2022) இரவு வீட்டிற்கு வந்து உறங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில், நேற்று (28/04/2022) இரவு 11.30 மணியளவில் வீட்டின் மேல் சீட்டைத் துளைத்து துப்பாக்கிக் குண்டு, அவர் மீது விழுந்துள்ளது. யாரோ கல் எறிகிறார்கள் என்று எண்ணிய ராஜேஷ் தொடர்ந்து உறங்கிக் கொண்டிருந்துள்ளார்.
இன்று (29/04/2022) காலை எழுந்து பார்த்த ராஜேஷுக்கு அதிர்ச்சிக் காத்திருந்தது. அருகில் குண்டு கிடப்பதைப் பார்த்த ராஜேஷ், எப்படி இங்கு வந்தது என மேலே பார்த்துள்ளார். அப்போது வீட்டின் மேற்பரப்பில் பொருத்தப்பட்டுள்ள சீட்டைத் துளையிட்டு, குண்டு உள்ளே வந்துள்ளது என்பதை அறிந்தார். பின்னர், இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அதைத் தொடர்ந்து, விரைந்து வந்த காவல்துறையினர், ராஜேஷின் வீட்டிற்குள் கிடந்த துப்பாக்கிக் குண்டை கைப்பற்றித் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பயிற்சியின் போது வந்த தோட்டாவா? வேறு யாரேனும் சுட்டார்களா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, பயிற்சி மையத்திற்கும் குண்டு பாய்ந்த வீட்டிற்கும் இடையிலான தூரம் 200 மீட்டர் மட்டுமே என்று கூறப்படுகிறது. குண்டு பாய்ந்த சம்பவத்தின் போது, நல்வாய்ப்பாக யாருக்கும் பாதிப்பில்லை.
சில மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டையில் பயிற்சியின் போது, வெளியேறிய துப்பாக்கிக் கொண்டு பாய்ந்து சிறுவன் உயிரிழந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.