
விழுப்புரம் சீனிவாச நகரை சேர்ந்தவர் வடிவேல் மகள் திவ்யா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) (14). இவர் நெல்லிக்குப்பம் அருகே உள்ள பட்டாம்பாக்கம் கிறிஸ்தவ பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9- வகுப்பு படித்து வந்தார். பள்ளிக்கு அருகிலே உள்ள விடுதியில் தங்கியிருந்து திவ்யா படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் வெள்ளிக்கிழமை(7.2.2025) மாலை விடுதியின் கழிவறையில் தூக்கித் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகம் மாணவியை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் கொண்டு சென்றனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். அதன்பிறகு மாணவி மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது தாய் ஸ்ரீ வித்யா நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பிறகு மாணவியின் உடலை பிரேதபரிசோதனைகாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு அவரது தாய், குடும்பத்தினர் பொதுமக்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் அருள் செல்வம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் ஜெயபாண்டியன், பகுதி செயலாளர் ஸ்டீபன் ராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் சிவக்குமார் உள்ளிட்டவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளியின் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் அருள் செல்வம் கூறுகையில், “மாணவி தூக்கு மாட்டிக் கொண்ட துப்பட்டாவை பள்ளி நிர்வாகம் எரித்துள்ளனர். இதனால் தடயங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இந்த மாணவி பள்ளியின் விடுதியில் உணவு மற்றும் கழிவறை இல்லை எனத் தொடர்ந்து புகார் அளித்தும் எதிர்த்துக் கேட்டு வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பள்ளி நிர்வாகம் மாணவி மரணத்திற்குத் தூண்டுதலாக இருந்திருக்கலாம். எனவே பள்ளி நிர்வாகத்தை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.