இந்தியாவில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் மோடி கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக இன்று மற்ற மாநில முதல்வர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வர்களும் கலந்து கொண்டனர்.
இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். அதன்படி, கரோனா தடுப்பு மருதத்துவ உபகரணங்களை வாங்குவதற்கு 3,000 கோடி தேவைப்படுகிறது. கரோனாவை தடுக்கவும், பொருளாதார இழப்பை ஈடுகட்டவும் 9,000 கோடி சிறப்பு நிதி தேவைப்படுகிறது. ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை உடனே விடுவிக்க வேண்டும். 2020-2021 ஆம் ஆண்டு நிதிக்குழு மானியத்தில் 50 சதவீதத்தை ஊரக உள்ளாட்சிகளுக்கு விடுவிக்கவேண்டும். மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு கூடுதல் உணவு தானியங்களை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.
இந்நிலையில் 15வது நிதிக்குழு பரிந்துரைப்படி, 26 மாநிலங்களுக்கு முதல் தவணையாக 15,187.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியாக தமிழகத்திற்கு 907.75 கோடியும், அதிகபட்சமாக உ.பி.-க்கு 2,438 கோடியும், மகாராஷ்டிராவுக்கு 1,456.75 கோடியும், பீகாருக்கு 1,254.50 கோடியும், மேற்கு வங்கத்திற்கு 1,103 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.