சேலம் பெண்கள் கிளைச் சிறையில் இரண்டு அதிகாரிகளிடையே ஏற்பட்ட பணம் வசூல் தொடர்பான மோதலில், அலுவலக நாற்காலிகள் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் சிறைத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மத்தியச் சிறை எதிரில் பெண்கள் கிளைச்சிறை உள்ளது. இங்கு சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த தண்டனை மற்றும் விசாரணைக் கைதிகள் என மொத்தம் 55 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பாதுகாப்புக்காக 30 வார்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பெண் காவலர்களுக்குள் மோதல், பணிப்பதிவேடு புத்தகம் கிழிப்பு என தொடர் சர்ச்சைகளில் சிக்கித் தவிக்கும் இந்த சிறையில் தற்போது அலுவலக நாற்காலிகளை அடித்து நொறுக்கும் அளவுக்கு மற்றொரு சம்பவம் நடந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இது தொடர்பாக சிறைத்துறை வட்டாரத்தில் விசாரித்ததில், கடந்த இரு நாட்களுக்கு முன்பு சிறைத்துறை அதிகாரி ஒருவர் பெண்கள் கிளைச்சிறைக்கு மற்றொரு அதிகாரியுடன் விசாரணைக்குச் சென்றிருக்கிறார். அப்போது அந்த உயர் அதிகாரி “யார் யாரோ பணம் வாங்கிக் கொண்டு இங்கு வந்து நம்முடைய உயிரை வாங்குகிறார்கள். இதனால் மேலிடத்திற்கு தேவையில்லாமல் பதில் சொல்ல வேண்டியதிருக்கிறது” என புலம்பியுள்ளார். இதைக் கேட்ட, உடன் சென்ற மற்றொரு அதிகாரி, “பெண் கைதிகளை பார்க்க வரும் உறவினர்களிடமும் ஜாமினில் செல்லும் கைதிகளிடமும் ஆயிரக்கணக்கில் பணம் கறப்பது யார் யார்? என்று எங்களுக்கும் தெரியும்” என பூடகமாகச் சொன்னார். அந்த இரண்டு அதிகாரிகளுமே ஒருவரையொருவர் தங்களைத்தான் சூசகமாக விமர்சித்துக் கொள்வதாகக் கருதியுள்ளனர்.
இதனால் அவர்களுக்குள் திடீரென்று கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது ஆத்திரம் அடைந்த இரண்டாம் நிலை அதிகாரி, சிறை அலுவலகத்திற்குள் இருந்த நாற்காலிகளை தூக்கித் தரையில் ஓங்கி அடித்ததால் அவை நொறுங்கிப் போயின. சத்தம் கேட்டு, பதற்றத்தில் அங்கு ஓடி வந்த சிறைக்காவலர்கள் அதிகாரிகளை சமாதானப்படுத்தியுள்ளனர். பின்னர் அந்த இரண்டு அதிகாரிகளும் அங்கிருந்து வேகமாக வெளியே கிளம்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் பெண்கள் கிளைச்சிறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.