Skip to main content

தாயை தேடி தனியாளாக சைக்கிளில் சென்ற சிறுவன்... பெண் போலீசாரின் கனிவு!

Published on 13/08/2021 | Edited on 13/08/2021
9 year old boy who started cycling in search of his mother

 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகிலுள்ளது முருகம் பக்கம். இந்த பகுதியை சேர்ந்தவர் ரகுராமன். இவர் அப்பகுதி கிராம உதவியாளராக பணி புரிந்து வருகிறார். இவருக்கும் தியாகதுருகம் பகுதியைச் சேர்ந்த சுவஸ்திக் என்பவருக்கும் பல ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 9 வயதில் சபரிநாதன் என்ற மகன் உள்ளார். அவர்  ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் சமீபத்தில் ஏற்பட்ட சிறு சச்சரவு காரணமாக ஸ்வஸ்திக் தாய் வீடான தியாகதுருகம் சென்று சில நாட்களாக தங்கியுள்ளார்.

 

தாய் தந்தைக்குள் ஏற்பட்ட சச்சரவு காரணமாக தன்னை விட்டு பிரிந்து சென்ற தாயின் ஏக்கம் அவரது மகன் சபரிநாதனை மிகவும் வாட்டியது. இதனால் தாயைக் காண வேண்டும் என்ற ஆவல் நாளுக்கு நாள் அதிகரித்தது. அதனால் தந்தை ரகுராமனிடம் தாயைக் காண வேண்டுமென்று கேட்டு அடம் பிடித்துள்ளார். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட சிறு சச்சரவு காரணமாக குழந்தையின் பறி தவிப்பை இருவரும் புரிந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் தாயை காண வேண்டும் என்று முடிவு செய்தார் சபரிநாதன். அதன்படி நேற்று முன்தினம் தந்தை ரகுராமன் தனக்கு வாங்கிக்கொடுத்த சைக்கிளை எடுத்துக்கொண்டு தாயை தேடி தியாகதுருகம் புறப்பட்டார் சபரிநாதன்.

 

சிறு கன்று பயமறியாது என்பது போல தாய் பாசத்தின் வேகத்தினால் திண்டிவனத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலை வழியே தியாகதுருகம் நோக்கி 103 கிலோமீட்டர்  சைக்கிள் பயணித்தார் சபரிநாதன். அப்போது தேசிய நெடுஞ்சாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மயிலம் காவல்நிலைய பெண் இன்ஸ்பெக்டர் கிருபா தன்னந்தனியாக சிறுவன் சைக்கிளில் செல்வதை பார்த்தார். அவருக்கு சிறு சந்தேகம் ஏற்பட்டது இரவு ஏழுமணி இந்த நேரத்தில் ஏகப்பட்ட வாகனங்கள் பறக்கும் இந்த சாலையில் சிறுவன் மட்டும் சைக்கிளில் தனித்து செல்வது ஏன்? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சிறுவனை தடுத்து நிறுத்தி தனது வாகனத்தில் அமரவைத்து பரிவுடன் விசாரித்துள்ளார். அப்போதுதான் தனது தாயைத் தேடி தியாகதுருகம் சென்று கொண்டிருப்பதாக சிறுவன் சபரிநாதன் கூறியுள்ளார்.

 

திண்டிவனத்தில் இருந்து 15 கிலோமீட்டர் சைக்கிள் பயணம் செய்துள்ள உனக்கு கஷ்டமாக இல்லையா இங்கிருந்து உனது தாய் ஊரான தியாகதுருகம் செல்ல இன்னும் 90 கிலோமீட்டர் பயணம் செய்ய வேண்டும் அவ்வளவு தூரம் உன்னால் சைக்கிளில் செல்ல முடியுமா? என்று இன்ஸ்பெக்டர் கேட்டுள்ளார். அதற்கு சிறுவன் சபரிநாதன் 15 கிலோமீட்டர் ஒரு மணி நேரத்தில் வந்துள்ளேன் இன்னும் சில மணி நேரத்தில் என் தாயைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் சைக்கிளை வேக.... வேகமாக..... மிதித்து சென்றுவிடுவேன் என்று தாய்ப்பாசம் கண்களில் கொப்பளிக்க கூறியுள்ளார் சபரிநாதன். இதைக் கேட்டு வியந்து போனார் பெண் இன்ஸ்பெக்டர் கிருபா, சிறுவனை தனித்து தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்க செய்வது  ஆபத்து என்பதை உணர்ந்து உடனடியாக அவரது தந்தை ரகு ராமனுக்கு செல்போன் மூலம் தகவல் அளித்து வரவழைத்தார். அவரிடம் சிறுவனை ஒப்படைத்து கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட சச்சரவு காரணமாக இந்த சிறுவனின் தாய் பாசம் எவ்வளவு உயர்வானது என்பதை இருவருமே மறந்து விட்டீர்களே அதை உணருங்கள் என்று அறிவுரை கூறி சிறுவனை தந்தையுடன் அனுப்பி வைத்தார். 

 

 


 

சார்ந்த செய்திகள்