Skip to main content

திருவண்ணாமலையில் கொடூரக் கொலை; சுற்றி வளைத்த காவல்துறை

Published on 14/01/2023 | Edited on 14/01/2023

 

9 people arrested in Tiruvannamalai Tyler case

 

திருவண்ணாமலை - தண்டராம்பட்டு சாலை தாமரை நகர் நல்லவன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 55 வயதான டைலர் ஆறுமுகம் என்பவர் கடந்த 7ம் தேதி இரவு வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.  

 

போலீசாரின் விசாரணையில் கொலை செய்யப்பட்ட ஆறுமுகம் டைலர் கடை மற்றும் பைனான்ஸ் நடத்தி வருவதும்., ஆறுமுகத்தின் மனைவி பிரபாவதி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வருவதும் இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் எனத் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து கொலைக்கான காரணம் குறித்துப் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை மேற்கொண்டனர்.

 

திருவண்ணாமலை நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து சிசிடிவி கேமரா பதிவுகளையும் இறந்தவரின் மொபைல் எண்களையும் வைத்து மேற்கொண்ட விசாரணையில், திருவண்ணாமலை அடுத்த வரகூர் கிராமத்தைச் சேர்ந்த 50 வயதான பரந்தாமன் என்பவருக்கும் ஆறுமுகத்திற்கும் ஏழு வருடங்களாக சுமார் பத்து லட்சம் வரை கடன் கொடுக்கல் வாங்கல் இருந்ததாகவும்., கடைசியாக சுமார் 3.5 லட்சம் பணம் கொடுத்ததாகவும் அந்தப் பணத்தை வட்டியுடன் திருப்பிக் கேட்டதற்கு பரந்தாமன் ஆறுமுகத்தின் கதையை முடிக்க கூலிப்படையை தேர்வு செய்து திட்டம் தீட்டியதாகச் சொல்லப்படுகிறது.

 

கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் இசக்கி (29), பாரதி (22), தமிழரசன் (20), ஸ்ரீகாந்த் என்கின்ற பூனை (20), கோபிநாத் (23), மோசஸ் (22), விநாயகமூர்த்தி (22), மணிகண்டன் (22) என ஒன்பது பேர் சேர்ந்து கொலை செய்துள்ளனர் எனத் தெரிய வந்தது.

 

இவர்கள் கடந்த 7ம் தேதி ஆறுமுகத்தை ஆள் நடமாட்டம் இல்லாத இருட்டான பகுதியில் வைத்து கொடூரமாகக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றதாக போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. கடந்த 11 ஆம் தேதி இதில்  நான்கு பேர் கைது செய்யப்பட்டு இருந்த நிலையில் 13 ஆம் தேதி மற்ற குற்றவாளிகளான இசக்கி, கோபிநாத், மோசஸ், விநாயகமூர்த்தி, மணிகண்டன் ஆகிய ஐந்து பேரும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம், கார், கத்தி  உள்ளிட்டவற்றைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்