ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தற்போது பரபரப்பு கட்டத்தை எட்டியுள்ளது. திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. அமைச்சர்கள், நிர்வாகிகள் ஆகியோரை ஈரோட்டில் முகாமிட வைத்து கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய மிகத் தீவிரமாகக் களத்தில் இறங்கியுள்ளது திமுக. மறுபுறம் அதிமுக இரட்டை இலை மற்றும் பிற நீதிமன்ற களேபரங்கள் அனைத்தையும் முடித்து தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ''பூரண மதுவிலக்கு என்றோ மதுக்கடைகளை குறைப்போம் என்றோ தேர்தல் வாக்குறுதி கொடுக்கவில்லை. பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் தான் மதுக்கடைகள் குறைவாக உள்ளன. கோவில், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகே உள்ள மதுக்கடைகள் கணக்கெடுக்கப்பட்டு 88 மதுக்கடைகள் குறைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பணிமனைகள் எல்லாம் அனுமதி பெற்றே போடப்பட்டுள்ளது'' என்றார்.