உச்ச நீதிமன்ற உத்தரவால் பட்டாசு உற்பத்தியில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்த முடியாத நிலையில், சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியிருக்கும் ஊர்களிலுள்ள 1070 பட்டாசு ஆலைகளும் மூடப்பட்டன. நேரடியாக வேலை பார்க்கும் 3 லட்சம் பட்டாசுத் தொழிலாளர்களும் வேலை இழந்த நிலையில், சிவகாசியில் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தி தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
அந்தப் போராட்ட களத்தில் உற்சாகமாக மைக் பிடித்த சிவகாசி பட்டாசு உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் மாரியப்பன், உச்ச நீதிமன்றம் வரை ஒரு பிடி பிடித்தார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாய்ந்து விடும் என்ற பயமே இல்லாமல் பேசிய அவர், சந்தடி சாக்கில் காவல் துறையினரையும் கலாய்த்தார். அடுத்து அவர் கிண்டல் செய்தது செய்தியாளர்களை.
எந்த இடத்தில் என்ன பேச வேண்டும் என்பதை உணராமல் நடந்து கொண்ட மாரியப்பன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தது சிவகாசி பிரஸ் கிளப்.
சிவகாசி டவுண் காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்ட அவர், பெரிய முதலாளி என்பதால் மரியாதையுடன் நடத்தப்பட்டார். தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டதால், வெறும் விசாரணையோடு புகாரை முடித்து வைத்தது சிவகாசி காவல்துறை.
மீண்டும் உற்சாக வெள்ளத்தில் மாரியப்பன் யாரையும் எதுவும் பேசாமல் இருந்தால் சரிதான்!