Skip to main content

அண்ணாமலை பல்கலை 81வது பட்டமளிப்பு விழா; 385045 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் ஆளுநர்

Published on 17/02/2018 | Edited on 17/02/2018

 

annamalai


அண்ணாமலைப் பல்கலைக்கழக 81-வது பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் கலந்து கொண்டு 385045 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கடந்த 6 ஆண்டுகளுக்கு பிறகு 81- வது பட்டமளிப்பு விழா சனியன்று நடைபெற்றது. விழாவிற்கு தமிழக ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோஹித்  தலைமை வகித்தார். பின்னர் அவர் மருத்துவம், பொறியியல், வேளாண்மை, ஆராய்ச்சி உள்ளிட்ட வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற 38843 பேருக்கு பட்டங்களை வழங்கினார். மேலும் தொலைதூர கல்வி மூலம் கல்வி பயின்று தேர்ச்சி பெற்ற 346202 பேருக்கும், பல்வேறு துறைகளில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 45 மாணவ மாணவிகளுக்கு தங்க பதக்கமும், 140 மாணவ மாணவிகளுக்கு பல்வேறு அறக்கட்டளையின் பரிசுகளை வழங்கினார். இதில் பல்கலைக்கழக துணைவேந்தர் மணியன் அனைவரையும் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார். உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கலந்து கொண்டு பேசினார். மத்திய புலனாய்வு ஆணையத்தின்  முன்னாள் இயக்குநரும், தேசிய மனித உரிமை ஆணையத்தின் முன்னாள் தலைமை இயக்குநருமான கார்த்திகேயன் கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா பேருரையாற்றினார்.

 

முன்னதாக ஆளுநர் சிதம்பரம் அருகேயுள்ள ஓமக்குளத்தில் உள்ள நந்தனார் மடத்திற்கு சென்று அவரது நினைவிடத்தில் வழிப்பட்டு மலர் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் நந்தனார் ஆண்கள் பள்ளிக்கு அருகே உள்ள சாமி சகஜானந்தா மணிமண்டபத்திற்கு சென்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஆளுநரை நந்தனார் கல்விக்கழக செயலாளர் ஜெயச்சந்திரன், தலைவர் சங்கரன், மணிமண்டப ஒருங்கிணைப்பாளர் பாலையா உள்ளிட்டவர்கள் வரவேற்றார்கள்.

 

ஆளுநர் சிதம்பரம் நகருக்கு வருவதையொட்டி சிதம்பரம் நகரத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகள் தரமற்ற முறையில் நடைபெறுகிறது என்றும், சிதம்பரம் நகரத்தில் சாலைகள் போக்குவரத்திற்கு லாயக்கற்று குண்டும் குழியுமாக உள்ளதால் பொதுமக்கள் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் சாலைகளின் பள்ளங்களில் விழுந்து செல்லும் அவலை உள்ளது. சிதம்பரத்தையொட்டி ஓடும் கொள்ளிடம்,வெள்ளாறு ஆகியவைகளின் வழியாக கடல்நீர் புகுந்து குடிநீர் உப்புநீராக மாறியுள்ளது. ஆறுகளில் தடுப்பனை கட்டவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆளுநரின் கவன ஈர்ப்பு நடவடிகைக்கு சிதம்பரம் வர்த்தக சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு அனைத்து வர்த்தக நிறுவனங்களும் ஆதரவு தெரிவித்து கடைகளை காலை முதல் திறக்கவில்லை. உணவு கடைகளும் மூடியதால் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு வெளியூரிலிருந்து வந்த மாணவ மாணவிகள் காலை மற்றும் மதிய உணவு மற்றும் எந்த பொருட்களும் வாங்க முடியாமல் கடும் அவதி அடைந்தனர். மேலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறை, அரசு ஊழியர்களும் உணவு கடைகள் இல்லாததால் அவதியடைந்தனர்.  

 

- காளிதாஸ்

 

சார்ந்த செய்திகள்