“காவிரிக்காக போராட்டம் நடத்துனவதானே? போலீஸ் மேலேயே புகார் சொல்லுவாளா? திருடுபோன உன் நகை உனக்கு வரணும்னா நீ வெத்து பேப்பர்ல கையெழுத்து மட்டும் போட்டுக்குடு. அவளை, திருட்டு வழக்குல கைது பன்றேன்” என்று வளசரவாக்கம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அமுதா மிரட்டியிருப்பது நக்கீரனுக்கு புகாராக வர விசாரிக்க ஆரம்பித்தோம்.
துணை கமிஷனரிடம் புகார்கொடுத்துவிட்டு நம்மிடம் பேசிய ராணி, “நான் சென்னை வளசரவாக்கத்துல இருக்குற மகளிர் ஹாஸ்டலில் தங்கியிருக்கேன். சில நாட்களுக்கு முன்பு செளந்தர்யான்னு ஒரு பொண்ணு புதுசா வந்து ஹாஸ்டலில் ஜாயிண்ட் பண்ணினாங்க. திடீர்ன்னு பேக்குல வெச்சிருந்த பணத்தை காணோம்னு ஹாஸ்டல் மேம்கிட்ட சொன்னாங்க. அதுக்கப்புறம், வளசரவாக்கத்திலிருந்து கிரைம் இன்ஸ்பெக்டர் அமுதா மேடமும் போலீஸும் வந்து ஹாஸ்டலில் விசாரிச்சாங்க.
அப்போ, பக்கத்து ரூம்ல காவிரி இஷ்யூக்காக போன வருடம் போராட்டம் நடத்தின பொண்ணும் இருந்தாங்க. அவங்கள பார்த்ததும் ‘உன்னை இதுக்குமுன்னால ஸ்டேஷன்ல பார்த்துருக்கேனே? நீ காவிரிக்காக போராடின பொண்ணுதானே?’ன்னு கேட்டாங்க இன்ஸ்பெக்டர் அமுதா. அவங்களும் ஆமாம்னு சொன்னாங்க. அதிலிருந்து, பணம் காணாமல் போன பிரச்சனையை விசாரிக்காம அந்த பொண்ணை மட்டுமே விசாரிச்சுக்கிட்டிருந்தாங்க.
அதுக்கப்புறம், செளந்தர்யா ரூமை காலி பண்ணிடுச்சு. ஆனா, காலி பண்ணின அன்னைக்கு என் பேக்குல இருந்த மூன்றரை பவுன் நகையை காணும். பிளேடு போட்டு யாரோ கிழிச்சு அந்த பணத்தை எடுத்துருக்காங்க. உடனே, காவல்துறை கட்டுப்பாட்டு அறை அவசர உதவி எண் 100 க்கு ஃபோன் பண்ணி புகார் கொடுத்தேன். வளசரவாக்கம் காவல்நிலையத்திலிருந்து வந்து ஹாஸ்டலில் விசாரணை பண்ணிட்டு போனாங்க. மறுநாள், வளரசவாக்கம் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்போனேன்.
இன்ஸ்பெக்டர் அமுதா என்னோட புகாரை வாங்கி படிக்கக்கூட இல்ல. போனதிலிருந்தே காவிரிக்காக போராடின பக்கத்து ரூம் பெண்ணை பற்றியே விசாரிச்சுக்கிட்டிருந்தாங்க. அதுமட்டுமில்ல, உன்னோட நகையை அவதான் எடுத்திருப்பா. நீ வெத்து பேப்பர்ல சைன் மட்டும் பண்ணு. காணாமப்போன உன் நகை கிடைக்கும்னாங்க இன்ஸ்பெக்டர் அமுதா. என்ன மேடம்… எனக்கு உதவியா இருக்கிறவங்க மேலேயே சந்தேகப்படுறீங்க? அதுவும், அவங்களைப்பற்றியே விசாரிச்சுக்கிட்டிருக்கீங்க? இப்போ, வெத்து பேப்பர்ல கையெழுத்து போடச்சொல்றீங்க?ன்னு நான் கேட்டபோது, ‘நீ கையெழுத்து போட்டுக்கொடு உன் நகை உனக்கு கிடைக்கும்’னு மிரட்டினாங்க.
என்னோட புகாரை வெச்சு காவிரி போராட்டத்துல ஈடுபட்ட பெண்ணை திருட்டு புகாரில் கைது பண்ண பார்க்குறாங்கன்னு புரிஞ்சுக்கிட்டு கையெழுத்து போட மறுத்துட்டேன். அதனால், என்னோட புகாரை பதிவு பண்ணாம சி.எஸ்.ஆரும் போட்டுக்கொடுக்காம அனுப்பிட்டாங்க.
அதுக்கபுறம், தி.நகர் துணை கமிஷனர் அசோக் குமார் சார்க்கிட்ட போயி புகார் கொடுத்தேன். அவர், உத்தரவிட்ட பிறகுதான் சி.எஸ்.ஆர் காப்பியே கொடுத்தாங்க. அதுவும், நான் புகார் கொடுத்த நாளில் சி.எஸ்.ஆர். கொடுக்காம அதற்கு மறுநாள் புகார் கொடுத்த மாதிரி சி.எஸ்.ஆர். போட்டு கொடுத்தாங்க. திடீர்ன்னு பார்த்தா, காலி பண்ணிக்கிட்டுப் போன செளந்தர்யாங்குற பொண்ணு திரும்ப ஹாஸ்டலுக்கு வந்துடுச்சு.
என்னோட புகாருக்காக ஹாஸ்டலுக்கு வந்து விசாரணை பண்ணின இன்ஸ்பெக்டர் அமுதா செளந்தர்யாக்கிட்ட அஞ்சு நிமிஷம்கூட விசாரிக்கல. ஆனா, ஹாஸ்டலில் உள்ள மற்ற எல்லார்க்கிட்டேயும் தனித்தனியா சுமார் 45 நிமிசத்துக்குமேல விசாரணை பண்ணினாங்க. செளந்தர்யாவை எதுவும் தொந்தரவு பண்ணக்கூடாதுன்னு எல்லோரையும் எச்சரிச்சாங்க.
என்னைப் பார்த்து, ஒரு காரணமாத்தான் வெத்து பேப்பர்ல சைன் கேட்டேன். நீ போட்டுக்கொடுக்கல. நீ யார்க்கிட்ட வேணாலும் போய் புகார் கொடு. ஆனா, எஃப்.ஐ.ஆர். போடணும்னா எங்கிட்டதான் வந்தாகணும். இதையும்போயி யார்க்கிட்ட சொல்லணுமோ சொல்லிக்கோன்னு கோபமா போய்ட்டாங்க. நான், யார்மேல சந்தேகப்படுறேனோ அவங்களை எல்லாம் விட்ட்டு எனக்கு யாரெல்லாம் உதவினாங்களோ, என்கூட இருக்கிறாங்களோ அந்த பொம்பள பிள்ளைங்களையெல்லாம் விசாரணைங்குற பேர்ல டார்ச்சர் பண்ணிக்கிட்டிருக்காங்க.
செளந்தர்யாங்குற பொண்ணுக்கு யாரோ அசோக்நகர்ல முத்துங்குற போலீஸை தெரியுமாம். அதனால, அந்த பொண்ணு பணம் காணலைன்னு சொன்ன அன்னைக்கே இன்ஸ்பெக்டர் அமுதாவே வந்து நேர்ல விசாரணை பண்ணினாங்க. ஆனா, என் புகாரை விசாரிக்காம… பழைய பகையை எல்லாம் மனசுல வெச்சுக்கிட்டு பழிவாங்குறதுக்காக என் புகாரை பயன்படுத்திக்கிட்டிருக்காங்க” என்று கண்கலங்கி அழுகிறார் புகார் கொடுத்த ராணி.
குற்றச்சாட்டு குறித்து வளசரவாக்கம் இன்ஸ்பெக்டர் அமுதாவிடம் நாம் கேட்டபோது, “செளந்தர்யா ஹாஸ்டலில் பணத்தை காணவில்லை என்று புகார் கொடுத்தார். பிறகு, ராணி தனது நகையை காணவில்லை என்று புகார் கொடுத்துள்ளார். இருவரது புகாருக்கும் சி.எஸ்.ஆர். கொடுத்து விசாரணை நடத்திவருகிறேன். நான், காவிரி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை மிரட்டவும் இல்லை. வெத்துப்பேப்பரில் கையெழுத்து கேட்டும் மிரட்டவுமில்லை” என்று அடியோடு மறுத்தவரிடம் 'நீங்கள் வெத்து பேப்பரில் கையெழுத்துக்கேட்டு ராணியிடம் மிரட்டிய ஆதாரம் உள்ளது' என்று சொன்னபோது ‘நேரில் வாருங்கள் பேசலாம்’ என்று ஃபோனை துண்டித்தார்.
அதாவது, காவிரி மேலாண்மை அமைக்கோரியும் பிரதமர் நரேந்திரமோடியின் தமிழக வருகையை கண்டித்தும் ‘கோ பேக் மோடி’ என்று கடந்த 2018 ஏப்ரல் 12 ந்தேதி சினிமா இயக்குனர்கள் மற்றும் உதவி இயக்குனர்கள் கருப்புச்சட்டை அணிந்து வடபழனி மெட்ரோ ரயிலில் ஏறி போராடப்போவதாக வடபழனி போலிஸார் அவர்களை கைது செய்தனர்.
அப்போது, காவல்துறையின் விசாரணையை செல்ஃபோன் மூலம் ரெக்கார்டு செய்கிறீர்களா என்று பரிசோதனை என்கிற பெயரில் பெண் உதவி இயக்குனர்களின் ஆடைகளை கழட்டி அத்து மீறியதாக வடபழனி காவல்நிலைய போலீஸார் மீது குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், இப்படி பரிசோதனை செய்ய உத்தரவிட்டது வடபழனி காவல்நிலைய இன்ஸ்பெக்டர் சந்துரு என்றும் உதவி இயக்குனர்கள் கண்ணீரோடு குற்றஞ்சாட்டினார்கள். இதனால், உயரதிகாரிகளின் கண்டிப்புக்கு ஆளானார்கள் வடபழனி போலீஸார். இதனை, மனதில் வைத்துக்கொண்டுதான் வளசரவாக்கம் இன்ஸ்பெக்டர் அமுதா செயல்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
திருட்டு புகாரில் யார் திருடியது என்று விசாரிப்பதற்கு பதில் காவிரிக்காக போராடியதாலும் காவல்துறையின் அராஜகத்தை கண்டித்து பேட்டிக்கொடுத்ததாலும் பழிவாங்கும் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார். இதுகுறித்து, உயரதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுசென்றபோது விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்கள். காவிரிக்காக போராடியவர்களை பழிவாங்கத்துடிக்கும் இன்ஸ்பெக்டர் அமுதா காட்டை அழித்துவிட்டு காவிரிக்காக கூக்குரல் கொடுக்கும் சாமியார் ஜக்கி வாசுதேவை கைது செய்வாரா? ஒருவேளை, ஜாக்கி வாசுதேவ் போராட்டம் பொய்யானது என்று தெரிந்ததால் கைதுசெய்யாமல் இருக்கிறார்போல ஹி ஹி!