சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் உள்ள ஸ்ரீசுதர்ஸன் பட்டாசு ஆலையில்இன்று (9ஆம் தேதி) ஏற்பட்ட வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. விபத்துகள் நடக்கும் போதெல்லாம், உராய்வு காரணமாக வெடிவிபத்து என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லிவிடுவது வழக்கமானதுதான். ஆனால், பட்டாசு ஆலை விபத்துகளின் பின்னணி குரூரம் நிறைந்ததாக உள்ளது. வெடி விபத்துக்குக் காரணம், முழுக்க முழுக்க விதிமீறல் என்கிறார்கள்.
இந்தப் பட்டாசு ஆலையின் உரிமையாளர் என்று சொல்லப்படும் சரவணன், வேறொருவருக்கு விதிமீறலாக லீசுக்கு விட்டதும், அந்த நபர் வேறு சிலருக்கு பட்டாசு அறைகளை லீசுக்கு விட்டும், பட்டாசு உற்பத்தி நடந்திருக்கிறது. விதிமீறலாக பட்டாசு அறைகளை லீசுக்கு எடுப்பவர்கள், முடிந்த மட்டிலும் அதிக உற்பத்தி செய்து, பெருமளவில் பணம் சம்பாதிப்பதில் மட்டுமே குறியாக இருப்பார்கள். இங்கு உரிய அனுமதியின்றி ஃபேன்சி ரகப் பட்டாசுகளை உற்பத்தி செய்துள்ளனர். அதிக வெயிலும் கடும் வெப்பமுமான சூழ்நிலையில், ஃபேன்சி ரகப் பட்டாசு உற்பத்தியின் மூலப்பொருளான செந்தூரம் என்று சொல்லப்படும் கெமிக்கலைக் கொண்டு தயாரிக்கப்படும் மணி மருந்து வேலையை, காலையில் சீக்கிரமாகவே முடித்துவிட வேண்டும் என்கிறார்கள்.
இப்பட்டாசு ஆலை, இந்த ஆபத்தை எல்லாம் பொருட்படுத்தாமல் செயல்பட்டு வந்திருக்கிறது. இத்தனைக்கும் ஆய்வு என்ற பெயரில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பட்டாசு ஆலைகளுக்குச் செல்வதெல்லாம் தொடர்ந்து நடக்கிறது. ஆனாலும், வெடி விபத்துகளையும் உயிரிழப்புகளையும் தடுக்க முடியவில்லை. காரணம், விதிமீறலாக பட்டாசு ஆலைகள் லீசுக்கு விடப்பட்டு, அங்கே உற்பத்தி நடப்பதை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்துவருவதுதான்.
‘பட்டாசு ஆலை விபத்தில் இனி ஒரு உயிர்கூட பறிபோவது நடக்காது’ என்று இந்தத் தேர்தலின்போது பேசிய நட்சத்திர வேட்பாளரை, இத்தொகுதிமக்கள் பார்த்துள்ளனர். பட்டாசுத் தொழிலோடு பின்னிப் பிணைந்துள்ள லஞ்சத்தையும், விதிமீறலையும் யாரால் தடுக்க முடியும்? ஆபத்து நிறைந்த பட்டாசுத் தொழிலை பெரிய பட்டாசு ஆலைகள் பலவும் மிக லாவகமாக நடத்திவருகின்றன. அங்கெல்லாம், எந்த விபத்தும் நடப்பதில்லை. குறுகிய காலத்தில் பெருமளவில் சம்பாதிக்கத் துடிப்பவர்கள்தான், விதிமீறலாக பட்டாசு ஆலைகளை நடத்தி, உற்பத்தியிலும் விதிமீறல் செய்து, பட்டாசுத் தொழிலாளர்களின் உயிரைப் பறித்தபடியே உள்ளனர் என்கின்றனர் இதனை நன்கு அறிந்தவர்கள்.