
புதுக்கோட்டை மாவட்டம் கிழக்கு கடற்கரை கிராமமான மீமிசல் அருகில் உள்ள கோபாலபட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜாபர் ஜாதிக். புருனை நாட்டில் பல்பொருள் அங்காடி நடத்தி வருவதால் தனது குடும்பத்துடன் அங்கே வசிக்கிறார். சொந்த ஊரில் உள்ள தனது வீட்டை கண்காணித்துக்கொள்ள தனது அக்காவிடம் சொல்லிவிட்டு வெளிநாடு சென்றுவிட்டார். தினசரி காலை மாலை தனது தம்பி வீட்டிற்குச் சென்று மின்விளக்குகளை எரியவிடும் அக்கா கடந்த 2 நாட்களாக வெளியூர் சென்றுவிட்டதால் அந்த வீட்டிற்குச் செல்லவில்லை. ஆள் தங்காத பெரிய வீட்டை கண்காணிக்க ஒரு சிசிடிவி கேமராவும் இல்லை.
இந்த நிலையில் தான் வெளியூர் சென்ற ஜாபர் சாதிக்கின் அக்கா இன்று வந்து பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. உடனே உறவினர்களுக்கும் மீமிசல் போலீசாருக்கும் தகவல் கொடுத்த நிலையில் அங்கு போலீசார் வந்து பார்த்த போது பீரோக்கள் திறக்கப்பட்டிருந்தது. ஆனால் பீரோவில் நகைகள் பொருட்கள் இல்லாத நிலையில் ஒரு அட்டைப் பெட்டியிலிருந்து சுமார் 750 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் பணம் திருடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மிளகாய் பொடி தூவப்பட்டிருந்ததால் மோப்பநாயும் யாரையும் பிடிக்கவில்லை. இந்தப் பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்தும் கூட இதுவரை யாரையும் போலீசார் பிடிக்கவில்லை என்கிறார்கள் கிராம மக்கள். தொடர் திருட்டு சம்பவங்களால் கிராமமே அச்சத்தில் உள்ளதாக கூறுகின்றனர் கிராம மக்கள்.