தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான 6.5 கோடி ரூபாயை முடக்கியுள்ளது அமலாக்கத்துறை.
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுடைய அசையா சொத்துக்களை முடக்கம் செய்து அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்திருக்கிறது. ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை போலீசார் ஏற்கனவே அனிதா ராதாகிருஷ்ணன் மீது சொத்துக்குவிப்பு வழக்கு ஒன்றை பதிவு செய்திருந்தார்கள். 2001 மற்றும் 2006 ஆம் ஆண்டு காலகட்டத்தில் அதிமுகவில் அவர் இருந்தபோது 4 கோடியே 90 லட்சம் ரூபாய் அளவிற்குச் சொத்து சேர்த்ததாக 2006ஆம் ஆண்டு தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
அந்த வழக்கு தொடர்பான விவரங்கள் அனைத்தும் அமலாக்கத் துறைக்கு அனுப்பப்பட்டது. இது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி ஆகஸ்ட் மாதம் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அனிதா ராதாகிருஷ்ணன் மட்டுமல்லாது அவரது குடும்பத்தில் உள்ள ஏழு பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. அது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணைக்கு பிறகு அமலாக்கத்துறை அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள். தற்பொழுது அவருடைய 120 ஏக்கர் நிலம் உள்ளிட்ட 18 அசையா சொத்துகள் அமலாக்கத் துறையால் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்த அசையா சொத்துக்களின் மதிப்பு 6.5 கோடி ரூபாய் என அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.