Skip to main content

“முதலமைச்சருடன் விவாதிக்க தயார்...” பி.ஆர்.பாண்டியன் சவால்

Published on 11/12/2020 | Edited on 11/12/2020

 

Farmers union leader P.R.Pandiyan

 

நிவர், புரவி புயல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் திருத்துறைப்பூண்டி பகுதியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பின் கச்சணம் கிராமத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, “நிவர், புரவி புயல் தாக்குதலால் வரலாறு காணாத பெரும் மழை பொழிவை தமிழகம் சந்தித்து இருக்கிறது. குறிப்பாக கடலூர் துவங்கி ராமநாதபுரம் மாவட்டம் வரையிலும் மிகப் பெரும் சேதத்தை விளைவித்து இருக்கிறது.

 

ஓரிரு மாதங்கள் பெய்ய வேண்டிய மழை ஓரிரு நாட்களில் கொட்டித் தீர்த்து இருக்கிறது. இதனால் கிராமங்களில் விளை நிலங்கள் முற்றிலும் நீரால் சூழப்பட்டு சுமார் பதினைந்து தினங்கள் பயிர்கள் மூழ்கி அழிந்து போய்விட்டது. இனி மறு உற்பத்திக்கு வாய்ப்பில்லை. குறிப்பாக 20 லட்சம் ஏக்கர் அளவிற்கு நீரால் சூழப்பட்டு தற்போது ஓரிரு நாட்களாக வடிய தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் 6 லட்சம் ஏக்கர் முற்றிலும் அழிந்து இருப்பதாக விவசாயிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

 


நீரால் சூழப்பட்ட நிலையிலேயே விரைந்து முதலமைச்சர் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டது விவசாயிகள் மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்த நிலையில், திருவாரூரில் தனது சுற்றுப் பயணத்தை நிறைவு செய்து செய்தியாளர்களிடம் பேசும் போது, இதுவரையிலும் 1 லட்சத்து 32 ஆயிரத்து 867 ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு புள்ளி விவரத்தை சொல்லிவிட்டு முழு கணக்கெடுப்பு நடத்துவதாக தெரிவித்திருப்பது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது.

 

6 லட்சம் ஏக்கர் பாதிக்கப்பட்ட நிலையில், கணக்கெடுப்பு அதிகாரிகளுக்கு 1.32 லட்சம் ஏக்கர் பாதிக்கப்பட்டிருப்பதாக இலக்கசொல்லி கணக்கெடுப்பு செய்வது மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். எனவே இதனை மறுபரிசீலனை செய்து சிறிய பெரிய விவசாயிகள் என்ற பாகுபாடின்றி முழுமையாக நிவாரணம் வழங்க வேண்டும். இழப்பீடு தொகை குறித்து முதலமைச்சர் அறிவிக்காதது விவசாயிகள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதனை உடனடியாக ஒரு தெளிவுப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன். 

 

மத்திய அரசு கொண்டு வந்திருக்கிற விரோத சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது. கார்ப்பரேட் ஆதரவானது என்று விவசாயிகள் போராட்டத்தில் தீவிரமாக இருக்கிறார்கள்' தமிழகத்தில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

 

சட்டத்தைக் கொண்டு வந்த பிரதமர் மோடிக்கு சட்டத்தின் சாதக பாதகங்கள் குறித்து தெளிவுப் படுத்த முடியாத  நிலையில் அவர் வாய் திறக்க மறுக்கிறார்.

 

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி எம்.எஸ்.பி.க்கு எழுத்துப்பூர்வமான உத்தரவாதம் தரப்படும், பாதிப்பு குறித்து சில மாற்றங்களை செய்த சட்டத்தை கொண்டுவர நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று அவர்களே ஒப்புக்கொண்டுள்ளனர். இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தான் ஆதரித்த ஒரே காரணத்துக்காக ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளும் பாதிக்கக்கூடிய  பேரழிவு சட்டத்திற்கு தொடர்ந்து வக்காலத்து வாங்கி பேசுவது விவசாயிகள் மத்தியில் மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் உடனடியாக அந்தக் கருத்தை திரும்பப் பெற வேண்டும். இல்லையேல் ஒரு முதலமைச்சர் விவசாயியாக இருப்பதை நான் பெருமைப்படுகிறேன் நான் ஒரு பாமர விவசாயி முதலமைச்சரோடு எந்த இடத்திலும் பொது மேடையிலோ அல்லது அவரது அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் முன்னிலையிலோ அல்லது அவர் விரும்புகிற ஊடகத்தில் அவர் விவாதிக்க தயாராக இருப்பார் என்றால் நான் அவரோடு உட்கார்ந்து சட்டம் குறித்து விவாதம் நடத்த தயாராக இருக்கிறேன் என் சவால் விடுகிறேன். அவர் இதுகுறித்து தனது நிலையை தெளிவுப்படுத்த முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்றார்.
 

 

சார்ந்த செய்திகள்