தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை புரட்டிப்போட்ட கஜா புயலின் தாக்குதலுக்குப் பின் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.இதன் காரணமாக எட்டு மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று காலை முதல் தற்போது வரை பெய்து வரும் மழை காரணமாக சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையிலும் மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாகை, திருவாரூரில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூரில் நிவாரண முகாம்கள் செயல்பட்டு வரும் கல்லூரிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியிலும் மழைப் பொழிவு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழுந்ததுள்ளதால் அடுத்த 24 மணிநேரத்தில் வடதமிழகத்தில் பரவலாக மழைபெய்ய வாய்ப்பு இருக்கும் என அறிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. விழுப்புரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, நாமக்கல், தருமபுரி, சேலம், ஈரோடு, கரூர் ஆகிய இடங்களில் கனமழைக்கும், சென்னையில் விட்டு விட்டு பொழியும் மிதமான மழைக்கும் வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது.