உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுவன் ஊசி செலுத்தப்பட்டு உயிரிழந்த நிலையில், ஊசி செலுத்திய போலி செவிலியரை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் விருதுநகரில் நிகழ்ந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அடுத்துள்ள மலையடிப்பட்டியைச் சேர்ந்தவர் மகேஸ்வரன். இவர் தனது 6 வயது மகனுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டதன் காரணமாக சம்பந்தபுரம் என்ற பகுதியில் வீட்டில் இயங்கி வந்த கிளினிக் ஒன்றிற்கு மகனை அழைத்துச் சென்றுள்ளார். அப்பொழுது அங்கு சிறுவனுக்கு ஊசி செலுத்தப்பட்டுள்ளது. பின்னர் வீடு திரும்பிய நிலையில் சிறுவனுக்கு அதிகமாக வியர்த்துள்ளது. அதனையடுத்து சிறுவன் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து மகேஸ்வரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் தென்காசி வடக்கு காவல் நிலைய காவலர்கள் விசாரணை நடத்தி வந்தனர். அதனைத் தொடர்ந்து சிறுவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து இன்று காலையில் மருத்துவ மற்றும் ஊரகப் பணித் துறையின் மாவட்ட இணை இயக்குநர், சுகாதாரத்துறை இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள் இறந்த சிறுவனின் வீட்டில் ஆய்வு நடத்தினர். மேலும் சிகிச்சை குறித்து உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் இருப்போரிடம் விசாரணையில் ஈடுபட்டனர். அதன் பிறகு சிறுவனுக்கு ஊசி செலுத்திய செவிலியர் வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்தியபோது, ஆக்னெஸ்ட் கேத்ரின் என்ற அந்தப் பெண் முறைப்படி செவிலியர் படிப்பு பயிலாமல் பல வருடங்களாக ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து போலி செவிலியர் ஆக்னெஸ்ட் கேத்ரின் கைது செய்யப்பட்டார். அதேபோல் அவரது வீட்டிலிருந்த ஏராளமான ஆங்கில மருந்துகள், மாத்திரைகள், சத்து டானிக்குகள், வலி நிவாரணிகள் பறிமுதல் செய்யப்பட்டது.