ஈரோடு, கருங்கல்பாளையம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரகுவரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கருங்கல்பாளையம் அடுத்த வைராபாளையம் காவிரிக்கரை பகுதியில் சிலர் சேவல் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். போலீசை பார்த்ததும் அந்த கும்பல் தப்பி ஓட முயன்றது. அந்த கும்பலை சுற்றி வளைத்துப் பிடித்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தனபால் (26), முருகன் (50), கற்பக ராஜன் (38), விஜய் (24), சூர்யா (29), மாதேஸ்வரன் (38) ஆகியோர் என தெரிய வந்தது.
இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சேவல் வைத்து சூதாடிய 6 பேரையும் கைது செய்தனர். மேலும் ரூ.600, சேவல்களையும் பறிமுதல் செய்தனர்.இதேபோல் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். ஈரோடு, சூரம்பட்டி நால்ரோடு, எஸ்.கே.சி ரோடு முதல் தெருவில் 4 பேர் கொண்ட கும்பல் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் இருந்து சீட்டு கட்டுதல் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.