
கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் அடுத்த பொன்னாச்சி பகுதியைச் சேர்ந்தவர் புட்டப்பா (50). இவர் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பெஜிலட்டி பகுதியில் உள்ள ஒரு கல் குவாரியில் கல் சைனிங் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் நண்பருடன் அதேப்பகுதியில் உள்ள மற்றொரு கல்குவாரியில் குளிக்க சென்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி நீரில் மூழ்கினார். இது பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர் உடனடியாக இது குறித்து கல்குவாரியில் உள்ள மேலாளர் இடம் தகவல் தெரிவித்தார். பர்கூர் போலீசாரும், அந்தியூர் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்கள் புட்டப்பாவை தேடினர். இரவு நேரம் என்பதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.
நேற்று 2 -வது நாளாக தேடும் பணி நடந்தது. அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று மாலை புட்டப்பா உடல் மீட்கப்பட்டது.இது குறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.