அண்மையில் ஈரோட்டில் 16 வயது சிறுமி வளர்ப்புத் தந்தையால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அவரது கருமுட்டை தனியார் மருத்துவமனையில் விற்கப்பட்டது தொடர்பான தகவல்கள் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியிருந்தது.
இது தொடர்பாகப் பலர் கைது செய்யப்பட்டிருந்தனர். அதேபோல் இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு மருத்துவமனைகளுக்குத் தமிழக அரசின் சார்பில் சீல் வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட சிறுமி ஈரோடு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் காப்பகத்திலிருந்து அந்த சிறுமி உட்பட ஆறு சிறுமிகள் சுவரேறிக் குதித்துத் தப்பித்துச் சென்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஈரோட்டிலிருந்து பவானி செல்கின்ற சாலையில் ஆர்.என்.புதூர் என்ற பகுதியில் அரசு குழந்தைகள் காப்பகம் உள்ளது. சுமார் 50 பெண் குழந்தைகள் அங்கு பராமரிக்கப்பட்டு வருகின்றனர். ஈரோடு கருமுட்டை விவகாரம் தொடர்பான 16 வயது சிறுமியும் இந்த காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அந்தக் குறிப்பிட்ட சிறுமி மட்டுமல்லாது மொத்தம் ஏழு சிறுமிகள் துணி துவைக்க வெளியே செல்ல அனுமதி கேட்டுள்ளனர். ஆனால் அனுமதி கிடைக்காததால் சுவர் ஏறிக் குதித்துத் தப்பிச் சென்றுள்ளனர். உடனடியாக காப்பக அதிகாரிகள் தேடியதில் ஆறு சிறுமிகள் பேருந்து நிறுத்தத்திலிருந்து மீட்கப்பட்டனர்.
இதுகுறித்து சித்தோடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் காப்பகத்தில் இருப்பதற்கு தங்களுக்கு விருப்பம் இல்லை எனச் சிறுமிகள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் கருமுட்டை விவகாரம் தொடர்பாகக் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த சிறுமி ஏற்கனவே காப்பகத்தில் தற்கொலைக்கு முயன்றது குறிப்பிடத்தக்கது.