கோவிட்-19 நோய்த் தொற்றில் இருந்து தப்பிக்க, இப்போதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. அதேநேரம், நோய்த்தொற்றில் இருந்து காத்துக்கொள்ள சமூக விலகலை தீவிரமாகக் கடைப்பிடிக்க இந்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இதற்காக நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை (மார்ச் 24) மாலை 6 மணி முதல் சிஆர்பிசி பிரிவு 144 தடை உத்தரவு எனப்படும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து 21 நாள்கள் இந்த ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்.
இந்த உத்தரவு அமலில் உள்ள காலக்கட்டத்தில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஒரே இடத்தில் கூடவும், ஒன்றாகச் செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அவ்வாறு செல்லும் நபர்கள், பொதுப் போக்குவரத்து வாகனங்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வளவு கடுமையான உத்தரவுகள் இருந்தும் சேலத்தில் புதன்கிழமை (மார்ச் 25) பல இளைஞர்கள் தெருக்களில் ஜாலியாக ஊர் சுற்றிக்கொண்டிருந்தனர். சாலையோர சிறு கடைகள் முதல் பெரும் வணிக நிறுவனங்கள் வரை அடைக்கப்பட்டிருந்ததால், முக்கிய சாலைகளில் ஆள்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் கிடந்தன. ஆனாலும், பொழுதுபோக்காக இளைஞர்கள் வாகனங்களில் தெருக்களில் சுற்றிக்கொண்டிருந்தனர்.
சேலம் மாநகரில் 144 தடை உத்தரவை மீறி, புதன்கிழமையன்று பொது இடங்களில் சுற்றிக்கொண்டிருந்த 55க்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். மேலும், தடையை மீறி இருசக்கர வாகனங்களில் சென்றதாக 1027 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. தடையை மீறி இயக்கப்பட்ட 25க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இது ஒருபுறம் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம், அஸ்தம்பட்டி, தாதகாப்பட்டி, சூரமங்கலம், அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உழவர் சந்தைகளில் காய்கறி வாங்க வருபவர்கள், கூட்டமாக நிற்பதைத் தவிர்க்கும் வகையிலும், கொரோனா தொற்றிலிருந்து தப்பிக்கும் நோக்கிலும், தனித்தனியாக நிற்பதற்காக தலா ஒரு மீட்டர் இடைவெளி விட்டு தனித்தனியாக கட்டம் போடப்பட்டு உள்ளன.
கட்டத்தை விட்டு வெளியேறிச்சென்று கூட்டமாக நிற்போர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை பாயும் என்றும் மாநகர் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.