கடந்த மார்ச் 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை டெல்லி, நிஜாமுதீனில் நடைபெற்ற மாநாட்டில், பல்வேறு நாடுகளில் இருந்து மக்கள் பங்கேற்றனர். இந்தியாவில் இருந்து 1000-க்கும் மேற்பட்டோர் இதில் கலந்துகொண்டனர். அவர்கள் சமீபத்தில் சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.
![55 admitted to Corona Ward overnight in hospital](http://image.nakkheeran.in/cdn/farfuture/KJ5xE8ukGsm2yQNUsoXABpR6OXwz--gITO8Qmt2d8Fw/1585753192/sites/default/files/inline-images/adssddsdsdsd.jpg)
கரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரமடைந்துள்ள நிலையில் டெல்லி சென்று திரும்பிய பலருக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. அவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தி, உரிய சிகிச்சை அளித்து வரும் சுகாதாரத்துறையினர், டெல்லி சென்று திரும்பியவர்கள் பட்டியலில் வராதவர்கள் தாமாகவே முன்வந்து மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கேட்டுக்கொண்டார்.
இந்தநிலையில், திருச்சி மாவட்டத்தில் இருந்து டெல்லி மாநாட்டில் 63 பேர் கலந்து கொண்டுள்ளனர். அவர்களில் 55 பேரை நோய் தடுப்பு குழுவினர் கண்டறிந்து அவர்களின் இல்லங்களுக்கே சென்று திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். அவர்கள் அனைவரும் கரோனா தடுப்பு சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் ரத்தம், தொண்டை சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதில் குறிப்பாக திருச்சி மாநகரில் இருந்து மட்டும் 21 பேர் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். அவர்கள் உறையூர், பாலக்கரை, தென்னூர், காஜா நகர், ஆழ்வார்தோப்பு பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். இதேபோல் புறநகரான லால்குடி, மண்ணச்சநல்லூர், மணப்பாறை, முசிறி, துவரங்குறிச்சி பகுதியில் இருந்தும் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர். மொத்தமுள்ள 63 பேரில் 55 பேர் கண்டறியப்பட்டு ஒரே நாளில் திருச்சி அரசு மருத்துவமனை, கரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள். மற்ற 8 பேரை நோய் தடுப்பு குழுவினர் தேடி வருகிறார்கள்.
இவர்கள் அனைவரிடமும் சளி, உமிழ்நீர், ரத்த மாதிரிகள் எடுத்து ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. திருச்சி அரசு மருத்துவமனையிலேயே கரோனா தொற்று பரிசோதனை ஆய்வுக் கூடம் உள்ளதால், திருச்சியிலேயே மாதிரிகள் அனைத்தும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதில், நோய் தொற்று உள்ளதாக வரும் முடிவுகள் குறித்து மீண்டும் ஆய்வு செய்வதற்காக இரண்டாவது முறையாக மாதிரிகள் எடுத்து திருவாரூரில் உள்ள வைரஸ் ஆய்வு கூடத்துக்கு அனுப்பப்படும். இந்த ஆய்வகத்திலிருந்து முடிவு உறுதி செய்யப்பட்டால்தான் கரோனா தொற்று உறுதி என அறிவிக்க முடியும் என திருச்சி அரசு மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.