வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் தகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் அது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுவடைய வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை வங்கக்கடலில் புயல் உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வங்கக்கடலில் புயல் உருவாகும் நிலையில், தமிழக அரசு சார்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தமிழக பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ராமச்சந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், 'தமிழகத்தில் மொத்தம் 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 5,093 நிவாரண முகாம்கள் அனைத்து மாவட்டங்களிலும் தயார் நிலையில் உள்ளது. மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நாகை, சென்னை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களுக்கு 25 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படை விரைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.