ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த திட்டமிடப்பட்டிருந்த 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 500 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வேதாளை கடற்கரை அருகே ஒரு தோப்பில் கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாகத் தகவல் கிடைத்ததையடுத்து க்யூ பிரிவு போலீசார் அந்த தோப்பு பகுதிக்குச் சென்று சோதனை நடத்தினர். அதில் 500 கிலோ தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவை அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து இது குறித்து விசாரித்து வரும் போலீசார் சம்பந்தப்பட்ட தோப்பின் உரிமையாளரை விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி மற்றும் ராமேசுவரம், மண்டபம் பகுதிகள் வழியாக இலங்கைக்கு போதைப்பொருட்கள், தங்கம் மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட வன உயிரினங்கள் கடத்தப்படுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.