தமிழகத்தின் முதல் கட்டமாக 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
இன்று தமிழக சட்டப்பேரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மீதான மானியக் கோரிக்கை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அத்துறையின் அமைச்சர் செந்தில் பாலாஜி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, 'டாஸ்மாக் கடை பணியாளர்களின் தொகுப்பு ஊதியம் உயர்த்தப்படும்' டாஸ்மாக் மேற்பார்வையாளர்களுக்கு 1,100 ரூபாயும், விற்பனையாளர்களுக்கு 930 ரூபாயும் உயர்த்தி வழங்கப்படும். டாஸ்மாக் உதவி விற்பனையாளர்களுக்கு 840 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும். ஏப்ரல் மாதம் முதல் உயர்த்தப்பட்ட தொகுப்பு ஊதியம் வழங்கப்படும். தொகுப்பூதிய உயர்வால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 31.57 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும். தமிழ்நாட்டில் 5,329 மதுபான சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் தகுதியான 500 சில்லறை கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும்.
உயர் அழுத்தம் கொண்ட மின் பாதைகளில் ஏற்படும் பழுதுகளைக் கண்டறிய ட்ரோன்கள் கொள்முதல் செய்யப்படும். மதுரை, கோவை, கரூர் மாநகராட்சி பகுதிகளில் மேல்நிலை மின் கம்பிகள் புதைவட மின் கம்பிகளாக மாற்றப்படும். நடப்பாண்டில் ஐம்பதாயிரம் விவசாய மின் இணைப்புகள் புதியதாக வழங்கப்படும். அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் 5 ஆயிரம் மெகாவாட் காற்றாலை உற்பத்தி நிலையங்கள் நிறுவப்படும். மின் உற்பத்திக்காக வெளிநாடுகளிலிருந்து குறைந்த விலையில் நிலக்கரி இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என அறிவித்துள்ளார்.