மகனுக்கு ஆசிரியர் வேலை வாங்கித்தருவதாகக் கூறி ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஒருவரிடம் ஐந்தரை லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் சாலமேடு பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (66). இவர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் கண்காணிப்பாளராக வேலை செய்து ஓய்வு பெற்றவர். இவரது மகன் கார்த்திகேயன், பி.எட். பட்டம் படித்துள்ளார்.
இவருடன் பள்ளியில் ஒன்றாகப் படித்த இவரது நண்பர் மகேந்திரன் கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி ஆறுமுகத்தைச் சந்தித்து எந்தெந்தப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது என்பது எனக்குத் தெரியும் ஒன்றரை லட்சம் கொடுத்தால் காலியாக உள்ள இடத்தை அதிகாரிகளுக்கு பணம் கொடுத்து கண்டறிந்து உங்களுக்குக் கூறுவேன். அதன் பிறகு காலியாக உள்ள பள்ளி ஆசிரியர் பணிக்கு பணத்தைக் கொடுத்து கார்த்திகேயனுக்கு வேலை வாங்கி விடலாம் என்று தெரிவித்துள்ளார்.
இதை நம்பிய ஆறுமுகம் மகேந்திரனிடம் ஒன்றரை லட்சம் பணம் கொடுத்துள்ளார் அதைத்தொடர்ந்து உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள குணமங்கலம் அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளியில் ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது அப்பள்ளியின் தாளாளர் கலிபத்துல்லாவிடம் இதுகுறித்து பேசிவிட்டேன். அவரையே உங்களிடம் நேராக அழைத்து வருகிறேன். அந்த ஆசிரியர் வேலைக்கு எவ்வளவு பணம் தேவை என்பதை அவரிடமே பேசி முடிவு செய்யலாம் என்று மகேந்திரன் கூறியுள்ளார். மகேந்திரன் கூறியது போலவே அந்தப் பள்ளி தாளாளர் கலிபத்துல்லாவை மகேந்திரன் ஆறுமுகத்திடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி உள்ளார். அப்போது கலிபத்துல்லா ஆறுமுகத்திடம் தமது பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணி தங்கள் மகன் கார்த்திகேயனுக்கு கிடைக்க வேண்டுமானால் 6 லட்ச ரூபாய் பணம் கொடுத்தால் அந்தப் பணியை கார்த்திகேயனுக்கு வழங்குவதாக கலிபத்துல்லா பேரம் பேசியுள்ளார். பள்ளி தாளாளரே நேரடியாக வந்து பணம் கொடுத்தால் வேலை என்று கூறியது ஆறுமுகத்திற்கு பெருத்த சந்தோஷத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியது.
அதன்படி கடந்த 2012-ஆம் ஆண்டு 4 லட்ச ரூபாயை மகேந்திரன் முன்னிலையில் கலிபத்துல்லாவிடம் ஆறுமுகம் கொடுத்துள்ளார். ஏற்கனவே ஒன்றரை லட்சம் கொடுத்ததையும் சேர்த்து மொத்த பணம் ஐந்தரை லட்சம், வேலை கிடைத்தவுடன் மீதி 50,000 தருவதாகக் கூறியுள்ளார் ஆறுமுகம்.
வேலை கிடைக்கும் வரை அதற்கு அத்தாட்சியாக கலிபத்துல்லாவிடம் பிராமிசரி நோட்டில் எழுதி வாங்கிக் கொண்டுள்ளார் ஆறுமுகம்.
அதன்பிறகு சில மாதங்களுக்குப் பிறகு அப்பள்ளியில் ஆசிரியர் பணியிடம் காலியாக இல்லை என ஆறுமுகத்திற்கு தெரியவந்துள்ளது மகேந்திரனும் பள்ளி தாளாளர் கலிபத்துல்லாவும் தன்னைத் திட்டமிட்டு ஏமாற்றியுள்ளனர் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து ஆறுமுகம் தான் கொடுத்த ஐந்தரை லட்சம் பணத்தைத் திருப்பித் தருமாறு மகேந்திரன் மற்றும் கலிபத்துல்லா ஆகிய இருவரிடமும் பலமுறை அவர்களைத் தேடிச் சென்று கெஞ்சி கேட்டுள்ளார். இருவரும் பணத்தைத் தராமல் ஏமாற்றி வந்துள்ளனர்.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்து வேறு வழியில்லாமல் ஆறுமுகம் விழுப்புரம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் மகேந்திரன் மற்றும் கலிபத்துல்லா ஆகிய இருவர் மீதும் புகார் கொடுத்துள்ளார். ஆறுமுகம் புகாரின் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் இது சம்பந்தமாக விசாரணை நடத்தி வருகின்றனர் ஒரு அரசு உதவி பெறும் பள்ளி தாளாளரே ஆசிரியர் பணி தருவதாகக் கூறி பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றிய தகவல் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.