ஆளுநர் மாளிகை முன்பு நவ.26,27,28 தேதிகளில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என ஐக்கிய விவசாயிகள் முன்னணி அறிவித்துள்ளது.
சிதம்பரத்தில் பேருந்து நிலையம் எதிரில் உள்ள தனியார் விடுதியில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாநில பொதுக்குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் பெ.சண்முகம் தலைமை வகித்தார். விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில செயலாளர் பசுமைவளவன், ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன், காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கே.வி.இளங்கீரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாநிலத் தலைவர் சண்முகம் பங்கேற்று பேசுகையில், மத்திய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து டெல்லி உள்ளிட்ட அனைத்து மாநிலங்களில் உள்ள 30 ஆளுநர் மாளிகை முன்பு அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும், ஐக்கிய விவசாயி முன்னணி சங்கங்கள் தலைமையிலான அனைத்து விவசாய சங்கங்களும், தொழிலாளர்களும் இணைந்து மிகப் பெரிய தொடர் போராட்டங்களை நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.
அதனடிப்படையில் நவ. 26, 27 ,28 ஆகிய மூன்று நாட்கள் இந்தியா முழுவதும் உள்ள அந்தந்த மாநிலங்களின் ஆளுநர் மாளிகை முன்பு மிகப்பெரிய அளவில் காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளோம். தமிழகத்தில் ஆளுநர் மாளிகை முன்பு இந்த காத்திருப்பு போராட்டம் நடத்த காவல் துறையினரிடம் அனுமதி கேட்டுள்ளோம். 3 நாட்களும் பகல் மற்றும் இரவு முழுவதும் காத்திருப்பு போராட்டம் நடைபெறுகிறது.
அனைத்து மாவட்டங்களிலிருந்து சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்த சிதம்பரத்தில் புதன்கிழமை நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்துள்ளோம் என்றார். முன்னதாக வாச்சாத்தி வழக்கில் தொடர்ந்து போராடி வெற்றி கண்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத்தலைவர் பெ. சண்முகத்திற்கு விவசாய சங்க தலைவர்கள் சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர். கூட்டத்தில் விவசாயிகள் சங்க மாநில செயலாளர் மாசிலாமணி, மாவட்ட செயலாளர் சரவணன் உட்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.