![Robbery](http://image.nakkheeran.in/cdn/farfuture/azhsJnA8qOiFzwplL2o0O7VThdbEtWJw-vWIYKgoh8A/1649733675/sites/default/files/inline-images/zz1242424242.jpg)
நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் நகைக் கடை உரிமையாளரை வெட்டிவிட்டு 5 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் புதுமனை பகுதியைச் சேர்ந்தவர் மைதீன் பிச்சை. வீரவநல்லூர் பஜாரில் நகைக் கடை நடத்தி வருகிறார். நள்ளிரவில் கடையை அடைத்துவிட்டு கடையில் இருக்கும் நகைகளை வீட்டுக்கு எடுத்துச் சொல்வதை மைதீன் பிச்சை வாடிக்கையாக வைத்துள்ளார். அதேபோல் கடையில் உள்ள பணத்தையும் எடுத்துச்செல்வது வழக்கமாம். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சிலர் நேற்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு பணம் மற்றும் நகைகளை எடுத்து சென்ற மைதீன் பிச்சையை பின் தொடர்ந்துள்ளனர். பைக்கில் வந்த 3 பேர் இரும்பு கம்பி மற்றும் அரிவாள் கொண்டு மைதீன் பிச்சையை தாக்கி அவர் கையிலிருந்த பணம் மற்றும் ஐந்து கிலோ தங்க நகையை திருடி சென்றுள்ளனர்.காயம்பட்ட மைதீன் பிச்சை திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன் நேரில் சென்று விசாரணை நடத்திய நிலையில், மாவட்ட டிஎஸ்பி ராமகிருஷ்ணனும் விசாரணை நடத்தினார். இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். அருகிலிருந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு குற்றவாளிகளைப் பிடிக்க போலீசார் முயற்சித்து வருகின்றனர்.