ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த புளியமங்கலம் சோதனைச் சாவடியில் செந்தில்குமார் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் மார்ச் 19 ஆம் தேதி இரவு அந்த வழியாக வந்த அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 45 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பறக்கும் படை அதிகாரியான செந்தில் குமார் காரில் இருந்தவர்களிடம் விசாரித்ததில் திருவள்ளூரில் இருந்து அரக்கோணம் நோக்கி கார் வந்தது தெரிந்தது. அந்த பணம் தனியார் வங்கிக்குச் சொந்தமானது என்று தெரிவித்தனர். அவர்கள் வைத்திருந்த ஆவணங்களில் குறிப்பிட்டிருந்த தொகையும் , காரில் இருந்து தொகையும் சரியாக இருந்தது. ஆனால் ஆவணத்தில் இருந்த காரின் எண்ணும், பணம் கொண்டு வந்த காரின் எண்ணும் வேறுபட்டிருந்தது.
இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் அதுகுறித்து விசாரித்தபோது சரியாக பதில் சொல்லவில்லையாம். இதனால் பணத்துடன் அந்த கார் அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. ஆவணங்கள் மாறி மாறி இருப்பதால் பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, வருமான வரித்துறை அதிகாரிகள் வந்து உரிய விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அரக்கோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.