நீலாங்கரையில் கார் கண்ணாடியை உடைத்து லேப்டாப் திருடிய 2 பேர் தொடர் கைவரிசையாக தேனாம்பேட்டையில் கார் கண்ணாடியை உடைத்து 10 லட்சம் ரூபாயை திருடிச் சென்றுள்ளனர். திருட்டில் ஈடுபட்ட அந்த நபர்களை போலீசார் தேடிவருகின்றனர். சென்னை நீலாங்கரை கஸூரா கார்டன் பகுதியைச் சேர்ந்த அபிநந்தன் நடராஜன் என்பவர் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். தனது காதல் திருமணத்தை பதிவு செய்வதற்காக பதிவு துறை அலுவலகம் எதிரே காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். வெளியில் வந்து பார்க்கும் பொழுது கார் கண்ணாடி உடைக்கப்பட்டு லேப்டாப் திருடப்பட்டிருந்தது . அங்கிருந்து சிசிடிவி கேமராவை திருப்பி வைத்துவிட்டு லேப்டாப்பை திருடிச் சென்றுள்ளனர்.
இதேபோன்று சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த வெங்கடாசலம் என்பவர் மகனின் கல்யாண செலவிற்காக தேனாம்பேட்டையில் உள்ள அவரது நண்பரிடம் இருந்து 10 லட்சம் ரூபாயை பெற்றுக் கொண்டு காரில் மயிலாப்பூரில் உள்ள இல்லம் நோக்கி சென்ற வழியில்,ஒரு கடையின் அருகே காரை நிறுத்திவிட்டு கடைக்குச் சென்று திரும்பி வந்த போது கார் கண்ணாடி உடைக்கப்பட்டு பத்து லட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டது.இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக இதுகுறித்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர்.
சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது நீலாங்கரையில் லேப்டாப்பை திருடிய அதே இரண்டு பேர்தான் இந்த திருட்டையும் செய்திருக்கின்றனர் என்பது ஊர்ஜிதமானது. இதையடுத்து அவர்களை பிடிக்க காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.