சேலம் பொன்னம்மாபேட்டை ரயில்வே கேட் அருகே மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அசோகன் (57). சேலம் மாநகராட்சியில் மாநகர பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி பரிவாதினி. இவர்களுக்கு ஜீவிகா என்ற மகளும், பிரஜீத் என்ற மகனும் உள்ளனர். மகள், சென்னையில் படித்து வருகிறார்.
கடந்த 9ம் தேதியன்று அசோகன், சேலம் மாநகராட்சி அலுவல் தொடர்பாக சென்னைக்குச் சென்றிருந்தார். நீச்சல் வீரரான பிரஜீத்தை அழைத்துக்கொண்டு, திருவண்ணாமலையில் நடைபெறும் நீச்சல் போட்டிக்கு பரிவாதினி சென்றுவிட்டார்.
இந்நிலையில், சென்னை சென்றிருந்த அசோகன், சனிக்கிழமை (ஜன. 11) அதிகாலை 5 மணியளவில், வீடு திரும்பினார். முகப்பு கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே பீரோக்கள் திறந்த நிலையிலும், பொருள்கள் சிதறியும் கிடந்தன.
இதுகுறித்து அம்மாபேட்டை காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தார். காவல்துறை உதவி ஆணையர் பூபதிராஜன், ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் காவலர்கள் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரித்தனர்.
பீரோக்களில் வைக்கப்பட்டிருந்த 40 பவுன் நகைகள் மற்றும் 3 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. விரல் ரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. மோப்ப நாயிடம் சிக்கி விடக்கூடாது என்பதற்காக, கொள்ளையர்கள் வீடு முழுவதும் மிளகாய் பொடியை தூவியுள்ளனர்.
அவருடைய வீட்டில் பல இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. என்றாலும், சிசிடிவி மேராவில் காட்சிகள் பதிவாகும் ஹார்டு டிஸ்கையும் மர்ம நபர்கள் கையோடு எடுத்துச் சென்றிருப்பதும் தெரிய வந்தது. தொழில்நுட்பம் தெரிந்த ஆசாமிகள்தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என சந்தேகிக்கப்படுகிறது.
பொறியாளர் அசோகன் வீடு, மக்கள் நெருக்கம் மிகுந்த தெருவில் அமைந்துள்ளது. எப்போதும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாகும். அசோகன் மற்றும் அவருடைய மனைவி ஆகிய இருவரும் வீட்டில் இல்லாத நேரத்தை நோட்டமிட்டே மர்ம நபர்கள் உள்ளே புகுந்திருக்க வேண்டும். அல்லது அவர்களுடைய நடவடிக்கைகளை நன்கு அறிந்த நபர்களே கூட இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.