சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியிலிருந்து பெட்ரோலியம் கம்பெனியின் லாரி ஒன்று, 20 ஆயிரம் லிட்டர் (வாகனங்களுக்குப் பயன்படுத்தப்படும் ஆயில்) இன்ஜின் ஆயிலை நிரப்பிக்கொண்டு விழுப்புரம் அருகே கண்டமங்கலம் பகுதியில் உள்ள பள்ளிதென்னல் என்ற பகுதியில் இயங்கிவரும் தனியார் கம்பெனிக்கு கொண்டு சென்றது. அந்த ஆயிலைக் கொண்டு வருவதற்காக சென்னையிலிருந்து புறப்பட்ட லாரியை மதுரை பகுதியைச் சேர்ந்த விமல் காந்தன் என்பவர் ஓட்டிவந்தார். இதனையடுத்து, கண்டமங்கலம் அருகே உள்ள சம்பந்தப்பட்ட ஆயில் கம்பெனிக்கு அருகே லாரி வந்துகொண்டிருக்கும்போது, அங்கு திடீரென்று மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் லாரியை வழிமறித்து நிறுத்தி, தான் ஒரு போலீஸ் என்று கூறி லாரியை சோதனையிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
உண்மையான போலீஸ் என நம்பிய லாரி டிரைவர், டேங்கர் லாரியை நிறுத்தியுள்ளார். இதைச் சாதகமாகப் பயன்படுத்திகொண்ட அந்த மர்ம நபர், லாரி டிரைவரை மிரட்டி அவரும் லாரியில் இருந்தபடியே டேங்கர் லாரியை கடத்திச் சென்றுள்ளார் மர்ம நபர். அப்போதுதான் இவர் உண்மையான போலீஸ் அல்ல என்பது டிரைவர் விமல் காந்தனுக்கு புரிந்தது. இந்நிலையில், அந்த லாரி மதகடிப்பட்டு அருகே வந்தபோது அந்த மர்ம நபரின் கூட்டாளிகள் இருவர் டேங்கர் லாரியில் ஏறிக்கொண்டனர். பின்னர், விழுப்புரம் நோக்கி சென்ற டேங்கர் லாரி சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதிக்கு வந்தது. பின்னர் அங்கிருந்த ஒரு தனியார் ஓட்டலின் அருகே டேங்கர் லாரியை நிறுத்திவிட்டு அதில் நிரப்பப்பட்டிருந்த இன்ஜின் ஆயிலை விற்பனை செய்வது தொடர்பாக அந்த மூன்று பேரும் ஆலோசனை செய்துகொண்டிருந்தனர். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட லாரி டிரைவர் விமல் காந்தன், நைசாக போலீசாருக்கு செல்ஃபோன் மூலம் தகவல் கொடுத்துள்ளார். உடனே விக்கிரவாண்டி போலீசார் டேங்கர் லாரி நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு விரைந்து சென்றனர்.
தங்கள் அருகே போலீசார் வேகமாக வருவதைக் கண்டதும் அந்த மூன்று மர்ம நபர்களும் லாரியையும் டிரைவரையும் விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து விக்கிரவாண்டி போலீசார், லாரி கடத்தப்பட்ட இடம் கண்டமங்கலம் காவல் நிலைய எல்லையில் உள்ளதால், கண்டமங்கலம் போலீசாரிடம் லாரியையும் டிரைவரையும் ஒப்படைத்தனர். இதுகுறித்து கண்டமங்கலம் போலீசார் வழக்குப் பதிவுசெய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், விழுப்புரத்தைச் சேர்ந்த ரிஷாந்த் என்பவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஆயில் ஏற்றிக்கொண்டு வந்த டேங்கர் லாரியைக் கடத்தியது தெரியவந்தது. மேற்படி மூன்று பேரையும் போலீசார் தனிப்படை அமைத்து தேடிவருகிறார்கள். டேங்கர் லாரி டிரைவர் விமல் காந்தன் சமயோசிதமாக போலீசாருக்குத் தகவல் அளித்ததும் விரைந்து போலீசார் வந்ததால் 40 லட்சம் மதிப்புள்ள ஆயில் மற்றும் டேங்கர் லாரியை மீட்க முடிந்தது என்கிறார்கள் போலீசார். இந்தக் கடத்தல் சம்பவம் விழுப்புரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.