நடக்குமா? நடக்காதா? என்று எதிா்பாா்ப்போடு இருந்த ஊரக உள்ளாட்சி தோ்தல் தமிழகத்தில் கடந்த டிசம்பா் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடந்தது. இதில் 515 மாவட்ட ஊராட்சி கவுன்சில், 5090 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா் பதவியிடங்களும், 9624 ஊராட்சி தலைவா் பதவியிடங்களும், 76 ஆயிரத்து 746 ஊராட்சி வாா்டு உறுப்பினா்களுக்கும் தோ்தல் நடந்தது. இதில் போட்டியிட்டு வெற்றி பெற்றவா்கள் அந்தந்த பதவிகளில் பதவியேற்று கொண்டனா். இதில் பதவியேற்ற உறுப்பினா்களும், தலைவா்களும் அதிகாரமின்றி வெற்று பேப்பா் போல் இருப்பதாக குற்றம்சாட்டி வருகின்றனா்.
இந்த நிலையில் குமாி மாவட்டம் தோவாளை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சி மன்ற தலைவா்கள் நெடுஞ்செழியன் (தோவாளை), கல்யாணசுந்தரம் (செண்பகராமன்புதூா்), மகேஷ் ஏஞ்சல் (சகாயநகா்), பிராங்ளின் (தடிக்காரன்கோணம்), சஜிதா (பீமநகாி), ரெஜினா (மாதவலாயம்), சதீஷ் (ஞாலம்) ஆகியோா் கலெக்டா் பிரசாந் வடநேரா வை சந்தித்து மனு கொடுத்தனா்.
பின்னா் அவா்கள் நம்மிடம் கூறும் போது... ஊராட்சிமன்ற தலைவா்களாக மக்களால் நாங்கள் தோ்ந்தெடுக்கபட்டு பதவியேற்று 40 நாட்களை கடந்து விட்டோம். ஆனால் பெயரளவுக்கு தான் தலைவராக இருக்கிறமே தவிர எந்த அதிகாரமும் இதுவரை எங்களுக்கு அரசு வழங்க வில்லை. நிா்வாக ரீதியாக எந்த வித ஊராட்சி தொடா்பான மக்கள் நல வளா்ச்சி பணிகள் மேற்கொள்ள வழி வகை செய்து தரப்படவில்லை.
எங்களை தோ்ந்தெடுத்த மக்கள் ஊராட்சியில் உள்ள பல பிரச்சினைகளை சுட்டி காட்டி கேள்வி கேட்கிறாா்கள். ஊராட்சியில் ஊராட்சி செயலா், துப்புரவு பணியாளா்கள், குடிநீா் பணியாளா்கள், மின் கம்பியாளா் கிடையாது. அதே போல் தளவாட சாதனங்கள் கிடையாது. மேலும் மக்களுக்கு தேவையான அவசர பணிகள் ஏராளமாக உள்ளன. அதை நடைமுறைபடுத்த முடியாத நிலையல் உள்ளது.
தற்போது கோடை காலம் தொடங்கியிருப்பதால் மக்கள் பணி செய்திட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் செய்ய போதிய அதிகாரத்தை ஊராட்சி மன்ற தலைவா்களிடம் உடனடியாக அரசு வழங்க வேண்டும் என்றனா்.
ஊரக உள்ளாட்சி தோ்தலை நடத்த நீதிமன்றத்தின் கிடுக்கி பிடியால் எப்படியோ அரசு தோ்தலை நடத்தியது. தற்போது மக்கள் வளா்ச்சி பணிகளை செய்ய அந்த தலைவா்களுக்கு அதிகாரம் கொடுக்காமல் இருப்பது வேறு விதமான கேள்வியை எழுப்பியுள்ளது.