விழுப்புரத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிட் கொட்டியதில் 4 மாணவ, மாணவிகள் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி அருகே உள்ள விழுப்புரம் மாவட்ட பகுதியில் அமைந்துள்ளது கண்டமங்கலம். இங்கு வள்ளலார் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் ஆய்வகம் இடிக்கப்பட்டு நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு நாட்கள் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை என்பதால் ஆய்வகத்தில் உள்ள பொருட்களை அகற்றாமல் இருந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் அங்கு இடிபாடுகளில் இருந்த ஆய்வக பொருட்களை எடுத்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது இடிபாடுகளில் இருந்த கான்கிரீட் துண்டு ஒன்று அங்கு வைக்கப்பட்டிருந்த ஆசிட் மீது பட்டு ஆசிட் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி குவளைகள் உடைந்துள்ளது. அப்பொழுது அங்கு ஆய்வகப்பொருட்களை அப்புறப்படுத்திக் கொண்டிருந்த மாணவ, மாணவிகள் நான்கு பேர் மீது ஆசிட் பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஒரு சிறுமியின் முகம் மற்றும் கண் பகுதியில் ஆசிட் பட்டு காயம் ஏற்பட்டுள்ளது. மீதமுள்ள மாணவர்களுக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மாணவ, மாணவிகள் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.