அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கடலூர் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் கடலூர் சி.ஐ.டி.யு அலுவலகத்தில் நடைபெற்றது. விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்க மாநில பொருளாளர் பெருமாள், மாவட்டச் செயலாளர் மாதவன் மற்றும் அனைத்து விவசாயிகள் சங்க தலைவர்கள் ரவீந்திரன், வெங்கடேசன், இளங்கீரன் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சேகர், விருத்தகிரி, பசுமைவளவன், கண்ணன், ராமச்சந்திரன், கலியபெருமாள், தென்னரசு, ஜெய குரு உள்ளிட்ட விவசாய சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மின்சார வரைவு திருத்தச்சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்தச்சட்டம், வேளாண் பொருட்கள் வணிக ஊக்குவிப்பு அவசரச்சட்டம், விவசாயிகளுக்கான விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்தப் பாதுகாப்பு அவசரச் சட்டம் ஆகியவற்றை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நடைபெறும் 'ஒரு கோடி கையெழுத்து' இயக்கத்தில் பங்கேற்பது, கடலூர் மாவட்டத்தில் அனைத்துக் கிராமங்களிலும் கையெழுத்து இயக்கத்தை நடத்துவது, ஜூலை 27- ஆம் தேதி அனைத்து வீடுகளிலும் கருப்புக்கொடி ஏற்றி விவசாயிகளின் எதிர்ப்பைப் பதிவு செய்வது என முடிவு எடுக்கப்பட்டது.
அதையடுத்து ஒரு கோடி கையெழுத்து இயக்கம் கடலூர் படைவீரர் மாளிகை அருகில் தொடங்கப்பட்டது. கையெழுத்து இயக்க தொடக்க நிகழ்ச்சியில் அனைத்து விவசாய சங்கத் தலைவர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டு கையெழுத்து இயக்கத்தைக் கையெழுத்திட்டுத் தொடங்கி வைத்தனர்.