Skip to main content

இறந்தவர் உடலை தகனம் செய்ய எதிர்ப்பு; சடலத்துடன் சாலை மறியல் செய்த உறவினர்கள்!

Published on 28/10/2020 | Edited on 28/10/2020

 

denial permission to cremate relatives road block

 

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகில் உள்ளது  செங்கமங்கலம் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செல்லதுரை (69), உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உடலை வலையன்குளம் சுடுகாட்டில் தகனம் செய்ய செல்லதுரை குடும்பத்தினரும் உறவினர்களும் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளையும் செய்தனர். ஆனால், வலையன்குளம் சுடுகாடு குறிப்பிட்ட சில சமூகத்தினருக்கு மட்டும் சொந்தமானது எனக் கூறி, செல்லதுரை சடலத்தை எரியூட்ட ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். 

 

ஆனால், அந்தச் சுடுகாடு அனைத்துச் சமூகத்தினருக்கும் சொந்தமானது என செல்லத்துரை தரப்பினர் தெரிவித்தனர். இதனால், காலை முதல் செங்கமங்கலம் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வம், வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படவில்லை. 

 

"கடந்த 15 நாட்களுக்கு முன்பு இப்படித்தான் ஒருவர் இறந்து அவரை எரியூட்ட பிரச்சனை வந்தபோது சமாதானப் பேச்சுவார்த்தைக்கு வந்த பேராவூரணி தாசில்தார் ஜெயலட்சுமி 15 நாளில் மாற்று ஏற்பாடு செய்வதாகச் சொல்லிச் சென்றார். ஆனால் இதுவரை எதுவும் நடவடிக்கை எடுக்கல. அதனால தாசில்தார் வரனும்" என்று சொல்லி குடும்பத்தினர், உறவினர்கள் செல்லத்துரை சடலத்தோடு, புதுக்கோட்டை - பேராவூரணி சாலையில் 200க்கும் மேற்பட்டோருடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். 


இதையடுத்து ஊராட்சி மன்றத் தலைவர் செல்வம், பட்டுக்கோட்டை டி.எஸ்.பி (பொறுப்பு) சுப்பிரமணியன், காவல்துறை ஆய்வாளர் (பொறுப்பு) அண்ணாதுரை, சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் ஆதிமூலம், வருவாய் ஆய்வாளர் கிள்ளிவளவன், கிராம நிர்வாக அலுவலர் கண்ணன் ஆகியோர் மீண்டும் பொதுமக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து வலையன்குளம் சுடுகாட்டில் செல்லத்துரை சடலம் எரியூட்டப்பட்டது. மறியல் காரணமாக இப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. 

 

 

 

சார்ந்த செய்திகள்