சீனாவின் வுஹானில் தொடங்கி தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் உலகம் முழுவதும் இதுவரை 9000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 170க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸால் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் இந்தியாவில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மாநில அரசுகளுக்கு 2570 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதில் நகர் பகுதிகளுக்கு 1629 கோடி ரூபாயும், ஊரகப் பகுதிகளுக்கு 940 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழகத்துக்கு 987.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவிற்கு ஆயிரத்து 307 கோடியும், ஒடிசாவிற்கு 186 கோடி ரூபாயும், அருணாச்சல பிரதேசத்துக்கு 70 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.