சேலத்தில், காதலர்களோடு தனிமையில் வலம் வரும் இளம்பெண்களை குறி வைத்து வழிப்பறியில் ஈடுபட்ட கும்பலை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்தவர் பவித்ரா (25). இவருடைய உறவினரான மோகனசுந்தரம் (25) என்பவர் சேலம் அஸ்தம்பட்டியில் பெற்றோருடன் வசிக்கிறார். இவர்கள் இருவரும் கடந்த 22ம் தேதி இரவு, சேலத்தில் இருந்து பவானிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
அப்போது சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் பட்டர்பிளை மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, அவர்களை பத்து பேர் கொண்ட ஒரு கும்பல் திடீரென்று வழிமறித்தது. அந்த கும்பல் கத்தி முனையில் பவித்ரா அணிந்திருந்த நகைகளை பறித்துக்கொண்டு தப்பி ஓடியது.
இதுகுறித்து பவித்ரா, கொண்டலாம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறை விசாரணையில், பட்டர்பிளை மேம்பாலத்தில் ஏற்கனவே ஒரு கும்பல் இதுபோல் காதலர்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்டு வந்ததாக தகவல் கிடைத்தது.
இது தொடர்பாக கொண்டலாம்பட்டி புத்தூரைச் சேர்ந்த மாரியப்பன் மகன் மணிகண்டன் (21), அவருடைய கூட்டாளிகள் பெரிய புத்தூரைச் சேர்ந்த சுபாஷ் (27), இளங்கோ (28), தினேஷ் (27) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 40 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த மூன்று ஆண்டுகளாக, இரவு நேரத்தில் பட்டர்பிளை பாலத்தில் தனிமையில் வரும் காதல் ஜோடிகளை குறி வைத்து, பெண்களிடம் நகைகளை பறித்து வந்தது தெரிய வந்தது. மேலும், சில பெண்களை செல்போனில் ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி வந்ததும், காதலனை அடித்து விரட்டிவிட்டு சில பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. எனினும் காவல்துறையினர் இந்த தகவலை உறுதிப்படுத்தவில்லை.
இந்த கும்பலைச் சேர்ந்த மேலும் சிலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.