வாக்கு எண்ணிக்கையின்போது சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாவண்ணம் குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய ரவுடிகள் 33 பேர் நேற்று ஒரே நாளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது. அன்று பதிவான வாக்குகள் இன்று (22ஆம் தேதி) எண்ணப்பட்டுவருகின்றன. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையின் போது எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் அமைதியான முறையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்காக, பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட மற்றும் பிரச்சனை ஏற்படுத்தக்கூடிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் உத்தரவிட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து திருச்சி மாநகரம் கண்டோன்மென்ட் சரகத்தில் 7 நபர்களும், கே.கே.நகர் சரகத்தில் 3 நபர்களும், பொன்மலை சரகத்தில் 7 பேரும், ஸ்ரீரங்கம் சரகத்தில் 6 பேரும், காந்தி மார்க்கெட் சரகத்தில் 7 பேரும், தில்லைநகர் சரகத்தில் 3 பேரும் என மொத்தம் 33 பேர் நேற்று ஒரே நாளில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவர் மீதும் குற்ற பிண்ணனி இருப்பதால் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக திருச்சி மாநகர காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கையின் போது பிரச்சனை ஏற்படுத்தக்கூடிய நபர்கள் கண்டறிந்து அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். திருச்சி மாநகரில் வாக்கு எண்ணிக்கையில் பிரச்சனை ஏற்படாமல் இருக்க குற்ற பின்னணி உள்ளவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.