கடலூர் மாவட்டம், தொழுதூர் அடுத்த, இராமநத்தம் அருகேயுள்ள கீழக்கல்பூண்டியில் முகமது இஸ்மாயில் என்பவரது மகன் இப்ராஹிம்(47) என்பவர், தனது வீட்டிற்கு அருகில் தடை செய்யப்பட்ட புகையிலையை மொத்தமாக வாங்கி வந்து சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிறிய, பெரிய கடைகளுக்கு மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்து வந்துள்ளார். மேலும் இப்ராஹிம் தனது வீட்டிற்கு அருகில் தனியாக குடோன் மற்றும் கம்பெனி அமைத்து சிறிய சிறிய பொட்டலமாக பாக்கெட் செய்து விற்பனை செய்து வந்துள்ளார்.
இதுகுறித்து நுண்ணறிவு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நுண்ணறிவு இன்ஸ்பெக்டர் ஜெரால்டு தலைமையில், தலைமைக் காவலர்கள் பத்மநாதன், சிவசுப்பிரமணியன் மற்றும் காவலர் ராஜசேகர் ஆகியோர் அடங்கிய போலீஸ் குழு நேற்று இரவு அவரது குடோனுக்கு சென்று சோதனை நடத்தினர். அப்பொழுது இப்ராஹிம் 15 டன் கலப்பிடம் இல்லா புகையிலையும், 10-டன் நிக்கோடின் கலந்த புகையிலையையும் பதுக்கி வைத்திருந்ததை கைப்பற்றி திட்டக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் சிவா மற்றும் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். துணைக் கண்காணிப்பாளர் சிவா தலைமையில் ராமநத்தம் இன்ஸ்பெக்டர் ஜெய்கீர்த்தி மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் விஸ்வநாதன், கலியமூர்த்தி உள்ளிட்ட போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.