நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ஏலத்திற்கு வரும் நகைகளை குறைந்த விலையில் எடுத்து தருவதாக மோசடி செய்த ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் ஜெகநாதன். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அவருடைய நண்பர் தனசேகரன் மூலம் நாமக்கல்லை சேர்ந்த சிவஞானம் என்பவர் அறிமுகமானார். ராசிபுரத்தில் உள்ள வேளாண் கூட்டுறவு வங்கியில் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 160 சவரன் நகைகள் ஏலத்திற்கு வருகிறது. எனக்கு உயரதிகாரியான புவனேஸ்வரியை தெரியும். அவரிடம் பேசி 30 லட்சம் ரூபாய்க்கு நகைகளை ஏலத்தில் எடுத்து தருகிறேன் என தெரிவித்துள்ளார்.
இதனை நம்பிய ஜெகநாதன் 30 லட்சம் ரூபாயை தனசேகரிடம் கொடுத்துள்ளார். வங்கி வாசலில் தொழிலதிபர் ஜெகநாதனையும், தனசேகரனையும், சிவஞானத்தையும் நிறுத்தி வைத்துவிட்டு உள்ளே சென்ற புவனேஸ்வரி பணத்துடன் தப்பிச் சென்றார். உள்ளே சென்றவர் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் அதிர்ச்சியடைந்த சிவஞானம், தனசேகரன் ஆகியோர் வங்கிக்குள் சென்று பார்த்த பொழுது அங்கு யாரும் இல்லாததால் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் சில மணி நேரத்திலேயே எருமைப்பட்டி அருகே புவனேஸ்வரியை போலீசார் மடக்கினர். சிவஞானமும் இந்த கூட்டுச் சதியில் தொடர்பிலிருந்து தெரியவந்து சிவஞானம், புவனேஸ்வரி உள்ளிட்ட ஐந்து பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 22 லட்சம் ரூபாயை மீட்டனர்.