
ராமநாதபுரத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் அங்குள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை வெளிநாட்டில் வேலை செய்வதால், தாயுடன் சிறுமி வசித்து வருகிறார். இந்த நிலையில் பள்ளிக்கு வந்த சிறுமிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஆசிரியர், சிறுமியுடன் விசாரித்த போது, தனக்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளதாகத் திடுக்கிடும் தகவலை தெரிவித்திருக்கிறார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர் இதுகுறித்து அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் சிறுமியை மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் சம்பவம் குறித்து சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது பல அதிர்ச்சி தகவல் வெளிவந்ததாக போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது.
சிறுமியின் தாயாருக்கும், கல்லூரி மாணவர் நவீன்(21) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளாக பழக்கம் இருந்து வந்ததாகவும், அதன்மூலம் சிறுமியை கடந்த 9 மாதங்களாகவே அடிக்கடி வன்கொடுமை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும், இந்த சம்பவத்திற்கு சிறுமியின் தாயே உடந்தையாக இருந்தும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சிறுமி டியூசன் சென்ற போது, டியூசன் ஆசிரியரின் மகன் பரத்(19) என்பவரும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சிறுமியின் தாய் உள்பட 3 பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.