பெரும்பாக்கத்தில் ஐ.டி. பெண் ஊழியர் லாவண்யா தாக்கப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் லாவண்யா (30) மென் பொறியாளரான இவர் சென்னையை அடுத்த நாவலூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுரிகிறார். இவர் நாவலூர் அருகில் உள்ள பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் கடந்த பிப்.12ம்தேதி நள்ளிரவில் பணி முடிந்து வீடு நோக்கி தாழம்பூர்-பெரும்பாக்கம் பிரதான சாலையில் தன்னுடிய ஆக்டிவா இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவரது பின் பக்க தலையில் அடித்ததில் சாலையின் நடுவில் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.
பின்னர் அவரை கடுமையாக தாக்கி ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை தரதரவென்று அருகில் உள்ள கட்டடத்திற்கு இழுத்துச் சென்றுள்ளனர். அவர் கூச்சலிடவே மீண்டும் தாக்கிவிட்டு அவரது நகைகள், விலை மதிப்புள்ள ஐ போன் ஆகியவற்றை பறித்துச் சென்றனர். போகும் போது அவரது ஆக்டிவா ஸ்கூட்டரையும் பறித்துச் சென்றனர்.
கடுமையான தாக்குதலில் ரத்த இழப்பின் ஊடே தட்டுத்தடுமாறி சாலையோரம் வந்து மயங்கி விழுந்த ராதாவை, காலையில் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்துவிட்டு பள்ளிக்கரணை போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த பள்ளிக்கரணை போலீஸார் ராதாவை மீட்டு சிகிச்சைக்காக பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ரத்த இழப்பு முகத்தில் தலையில் கடுமையாக தாக்கப்பட்டதால் சுய நினைவு இழந்த ராதா உயிருக்கு ஆபத்தான நிலையில் ஐசியூவில் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சையின் விளைவாக அவர் கண்விழித்தார். அவரது முகத்தில், தலையில் தாக்கியதில் படுகாயம் ஏற்பட்டு தையல் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொள்ளையர்கள் எடுத்துச்சென்ற ஆக்டிவாவை சோழிங்கநல்லூர் அருகே டாஸ்மாக் அருகில் இருந்து போலீஸார் கண்டுபிடித்தனர். இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக சூர்யா என்ற இளைஞரை போலீஸார் பிடித்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், தற்போது லோகேஷ், விநாயகமூர்த்தி, நாராயணமூர்த்தி ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.