அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா மீதான புகாரை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழு அமைத்து தமிழக அரசு, அரசாணை பிறப்பித்திருக்கிறது. இந்த அதிரடி அரசாணை, அண்ணா பல்கலைக்கழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்டதிலிருந்தே சர்ச்சைகள் வெடித்தபடி இருந்தன.
இந்த நிலையில், சூரப்பா மீது பணி நியமனங்களில் பணம் பெற்றது, கல்லூரிகளுக்கான பொருட்கள் வாங்கியதில் முறைகேடு, தனது மகளை முறைகேடாகப் பணிக்கு அமர்த்தியது, தகுதியற்றவர்களைப் பணி நியமனம் செய்தது உள்ளிட்ட பல்வேறு ஊழல் புகார்கள் அவர் மீது கூறப்பட்டு வந்தன. இந்நிலையில் அவர் மீது தமிழக அரசு அதிரடியாக விசாரணை கமிஷன் அமைத்துள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக விசாரணை கமிஷன் தலைவர் கலையரசன் சில தகவல்களை தற்போது தெரிவித்துள்ளார். அதன்படி, சூரப்பா மீது 280 கோடி நிதி மோசடி கூறப்பட்டுள்ளதால், சூரப்பாவை நிதி அலுவலர்கள் மற்றும் ஆடிட்டர்களை கொண்டு விசாரணை நடத்த திட்டம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.